“இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க” என்று நாம் வாழ்த்துகிறோம். ஆனால் நாம் நடுத்தெருவில் தள்ளப்படுகிறோம் என்று இன்று நண்பகல் ஸ்கோட் தெரு கந்தசாமி கோயிலின் முன் நடுச்சந்தியில் நடந்த சிறீலங்காவுக்கு எதிரான கண்டனப் பேரணியின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.
“எனக்குப் பின்னால் பாருங்கள். கோயில் உண்டு. அங்கு தெய்வம் உண்டு. ஆனால் அங்குள்ள மண்டபத்தினுள் சென்று நீதி கேட்க அனுமதி இல்லை. இதுதான் நம்மவர்கள் போராட்ட உணர்வுக்கு அளிக்கும் மதிப்பு”, என்று காட்டமாக மனோகரன் கூறினார்.
இப்போது நாம் நடுச்சந்தியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் மனம் தளரக்கூடாது.
“நாம் போராட்டவாதிகள். தமிழர்கள் போராட வேண்டும், தொடர்ந்து போராட வேண்டும்” என்று கூறிய மனோகரன், இந்தப் போராட்டத்தில் மலேசிய அரசாங்கத்திற்கும் பங்குண்டு என்பதை வலியுறுத்தினார்.
ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மன்ற கூட்டத்தில் நமது நாட்டு அரசாங்கம் சிறீலங்கா அந்நாட்டு தமிழ் மக்களை இன ஒழிப்புக்கு உட்படுத்தியதற்கு தண்டனை வழங்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிய வேண்டும். “இப்பேரணி அதனை வலியுறுத்துகிறது” என்றாரவர்.
மலேசிய அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டும். இல்லை என்றால் நாம் செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.