செம்போர்ணாவில் மார்ச் 2ம் தேதி கம்போங் சிமுனுலில் கொல்லப்பட்ட ஆறு போலீஸ் அதிகாரிகளுடைய சடலங்கள் சிதைக்கப்பட்டதை போலீஸ் முகநூல் பதிவில் உறுதி செய்துள்ளது.
சபா நெருக்கடி நிகழ்வுகளை வெளியிட்ட அந்தப் பதிவில் தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் நடத்திய மறைவுத் தாக்குதலில் கொல்லப்பட்ட தங்கள் சகாக்களுடைய சடலங்களை மீட்கவும் காயமடைந்தவர்களைக் காப்பாற்றவும் மீட்புக் குழு ஒன்றை தான் அனுப்ப வேண்டியிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
கம்போங் சிமுனுலிலும் கம்போங் ஸ்ரீ ஜெயாவிலும் பிலிப்பின்ஸ் ஊடுருவல்காரர்கள் நடமாடுவதாகத் தகவல் கிடைத்ததும் அதனை புலனாய்வு செய்வதற்காக போலீஸ், குழு ஒன்றை அங்கு அனுப்பியதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கம்போங் சிமுனுலைச் சென்றடைந்த போலீஸ் குழு மீது ஊடுருவல்காரர்கள் மறைவுத் தாக்குதலை நடத்தினர். அதில் ஆறு போலீஸ் அதிகாரிகள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். இருவர் காயமடைந்தனர். போலீசார் ஆறு ஊடுருவல்காரர்களைக் கொன்றனர்.
“அடுத்து போலீஸ், மீட்புக் குழு ஒன்றை அங்கு அனுப்பியது. அந்தக் குழு உயிர்நீத்த நமது வீரர்களின் சடலங்களை மீட்டதோடு செம்போர்ணா கம்போங் சிமுனுலில் சிக்கிக் கொண்ட போலீஸ்காரர்களையும் காப்பாற்றியது.”
“உயிரிழந்த போலீஸ் அதிகாரிகளுடைய சடலங்களை ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் மோசமான அளவுக்கு சிதைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது,” என்றும் அந்த போலீஸ் முகநூல் பதிவு தெரிவித்தது.
கம்போங் சிமுனுல் சம்பவத்தில் உயிரிழந்த சில போலீஸ்காரர்களுடைய சடலங்கள் தலையில்லாமல் இருந்தன என்றும் கண்கள் பறிக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்பட்டதை உறுதி செய்ய தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் ஏற்கனவே மறுத்திருந்தார்.
அந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், படையெடுப்பாளர்கள் இஸ்லாத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.