‘10 இடங்கள் பெரும்பான்மையில் வெல்வோம்’ : அன்வார் ஆருடம்

1anvஎதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் 10-க்கும் கூடுதலான இடங்கள் பெரும்பான்மையில் வெல்வதுடன் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது ஆறைக் கைப்பற்றும் என்று நம்புகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

ஆட்சி ஏற்கும் நாளில், பக்காத்தான் செய்தித்தாள் உரிமங்கள் பெறுவதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி தாராளமயமாக்கும். இன்று கோலாலும்பூரில் வழங்கிய நேர்காணலில் அன்வார் இவ்வாறு மொழிந்தார்.

பக்காத்தான் அது ஆட்சி ஏற்ற முதல் 100 நாள்களில் கல்வி, ஊழல்ஒழிப்பு, அரசாங்கக் கொள்முதல் முதலியவற்றில் அதன் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கும். முன்னாள் தலைவர்களுக்கு எதிராக- 1998இல் தம்மைப் பதவியிலிருந்து தூக்கிய டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராகக் கூட- பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது எனவும் அன்வார் கூறினார்.

“நான் அளவுமீறிய நம்பிக்கையுடன் பேசுவதுபோல் தொனிக்கும். ஆனால், இப்போது இருக்கும் போக்கை வைத்து ஒரு வசதியான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்”, என்றார் அந்த 65-வயது அரசியல்வாதி. “ 10-ஐத் தாண்டினாலே வசதியான  பெரும்பான்மைதான்”.

பிரதமர், ஏப்ரல் 28-க்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்தாக வேண்டும்.  அதன்பின் 60 நாள்களில் தேர்தலை நடத்தியாக வேண்டும்.

22 ஆண்டுக்காலம் பிரதமராக இருந்த மகாதிர்,  அன்வாரைப் பதவிநீக்கம் செய்த பின்னர்  அவர் வகித்த நிதி அமைச்சர் பொறுப்பைத் தாமே ஏற்றார். அதன்பின் வந்த அப்துல்லா அஹமட் படாவி, நஜிப் ஆகியோரும் நிதி அமைச்சைத் தங்கள் வசமே வைத்துக்கொண்டனர். ஆனால்,  அன்வார் பிரதமரானால், நிதி அமைச்சை வேறொருவரிடம் ஒப்படைப்பார்.

“எட்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்த அனுபவம் உண்டு. அதில் வேலைப்பளு அதிகம்”, என அன்வார் கூறினார்.  “பிரதமரே, நிதி அமைச்சராக இருப்பது இயலாத காரியம்”. இரண்டையும் கவனித்துக்கொள்ள நேரம் போதாது என்றார்.

பக்காத்தான் நிதி அமைச்சர் பற்றியோ மற்ற அமைச்சர் பற்றியோ இன்னும் முடிவு செய்யவில்லை என்றாரவர்.

மெர்டேகா ஆய்வு மையத்தின் அரசியல் ஆய்வாளரான இப்ராகிம் சுபியானைத் தொடர்புகொண்டு வினவியபோது போட்டி “மிக நெருக்கமாக இருக்கும்”, என்றார். “மாற்றரசுக் கட்சி மிக வலிமையுடன் விளங்கும் தருணம் இது”.

சாபா ஊடுருவல்

பிரதமர் நஜிப், முன்பிருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கை பிஎன்னுக்கு இருப்பதாக கடந்த டிசம்பரில் கூறினார். ஆனால், டிசம்பரில் அவருக்கிருந்த 63 விழுக்காடு பிப்ரவரியில் 61 விழுக்காடாகக் குறைந்தது என மெர்டேகா மையம் பிப்ரவரி 26-இல் கூறியிருந்தது.

1anv2“நஜிப்பின் நிலைதான் ஆபத்தானது. தோற்றுப்போனால் வெளியேற வேண்டிவரும். குறுகிய பெரும்பான்மை பெற்றால் அவர்களே அவரை வெளியேற்றி விடுவார்கள்”, என்ற அன்வார் “எப்படியும் அவர் வெளியேறுவது உறுதி”, என்றார்.

பக்காத்தான் பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான், கெடா ஆகிய மாநிலங்களைத் தக்க வைத்துக்கொள்ளும். பேராக்கை மீண்டும் கைப்பற்றும். நெகிரி செம்பிலானை முதல்முறையாக வெற்றிகொள்ளும். ஜோகூரில் ஆழமாக ஊடுருவும் என்றவர் சொன்னார்.

சாபாவில் அண்மைய அந்நிய ஊடுருவல் காரணமாக வெற்றி வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை என்றே அவர் எண்ணுகிறார். சாபாவில், போலிசும் இராணுவமும் பிலிப்பீன்சிலிருந்து வந்த ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அதனால் அதன் சில பகுதிகளில் தேர்தல் தாமதித்து நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறியதாக நேற்று பெர்னாமா அறிவித்திருந்தது.

ஆனால், மற்ற இடங்களில் தேர்தலைத் தள்ளிப்போடும் சாத்தியமில்லை என்று அன்வார் கூறினார். நாடாளுமன்றத்தின் 222 இடங்களில் அவரது பக்காத்தான் ரக்யாட் 75-ஐ வைத்துள்ளது. பிஎன்னிடம் 137 இடங்கள்.

– Bloomberg

TAGS: