2 ஆவது எஸ்டி-இல் சம்பந்தமுண்டு என்பதை சிசில் எப்ரேஹம் ஒப்புக்கொண்டாராம்

1bar

தனியார் துப்பறிவாளர்(பிஐ) பி.பாலசுப்ரமணியம் செய்த இரண்டாவது சத்திய பிரமாணத்தை(எஸ்டி) வழக்குரைஞர் சிசில் எப்ராஹம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.  பிரதமரின் உத்தரவின்பேரில் அவ்வாறு செய்ததை அவரே தம்மிடம் தெரிவித்ததாக வழக்குரைஞர் அமெரிக் சிங் சித்து கூறினார்.

காலஞ்சென்ற பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞரான அமெரிக், இன்று கோலாலும்பூரில் நடைபெற்ற மலேசிய வழக்குரைஞர் மன்ற ஆண்டுக்கூட்டத்தில்(ஏஜிஎம்) இத்தகவலை வெளியிட்டார்

ஏஜிஎம்-மில் இரண்டாவது எஸ்டியைத் தயாரித்துக் கொடுத்தவரைக் கண்டறிய ஒரு தனிக் குழுவை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தின்மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது அவர்  இத்தகவலை வெளியிட்டார்.

1americk“சிசிலைச் சந்தித்தபோது, பாலாவுக்குத் தெரியாமலேயே இரண்டாவது எஸ்டியை வரைந்ததை ஒப்புக்கொண்டார். அவ்வாறு செய்யுமாறு நஜிப் அவருக்கு உத்தரவிட்டாராம்”, என்று அமெரிக் (வலம்) கூறினார்.

டிவிட்டரில் இச்செய்தி வெளிவந்ததும் இணையம் பற்றிக்கொண்டது.  அதன் தொடர்பில் அடுத்தடுத்து பல பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. ஒரு டிவிட்டர் செய்தி அமெரிக் சிங் பலத்த பாராட்டைப் பெற்றார் என்றது.

“நிர்மலன்21: அமெரிக் சிங்கை மலேசிய வழக்குரைஞர் சங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாராட்டியது. ஏஜிஎம்மில் இப்படி ஒன்று நடந்து நீண்ட காலமாயிற்று”.

ஏஜிஎம்-முக்கு வெளியில் மலேசியாகினி பல வழக்குரைஞர்களைச் சந்தித்தது. அவர்கள் அமெரிக் சில வாரங்களுக்குமுன்  சிசில்  எப்ரேஹமைச் சந்தித்தது தங்களுக்குத் தெரியும் என்றனர்.

இச்செய்தியை இங்கு பதிவேற்றும் நேரம் வரை ஏஜிஎம்-மில் அம்மகஜர் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன் தொடர்பில் மலேசியாகினி சிசில் எப்ராஹமைத் தொடர்புகொண்டு வினவியதற்கு அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

பாலா, தாம் செய்திருந்த முதலாவது சத்திய பிரமாணத்தில் மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷாரீபுவின் கொலையில் நஜிப்புக்குத் தொடர்புண்டு என்று கூறியிருந்ததை மறுத்து இரண்டாவதாக ஒரு சத்திய பிரமாணத்தைச் செய்தார். அது, மேலிட உத்தரவின்பேரில் செய்யப்பட்ட ஒன்று எனக் கூறப்பட்டு வந்தது.

இரண்டாவது எஸ்டி-யுடன் தொடர்புகொண்ட வழக்குரைஞரை மன்றம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஒன்றை வழக்குரைஞர்கள் சிலர் இன்றைய ஏஜிஎம்-மில் கொண்டு வந்தனர்.

இவ்விவகாரத்தில் முக்கியமானவரான பாலா, நேற்று மாரடைப்பால் காலமானது இப்போது ஒரு புது திருப்பத்தை உண்டுபண்ணியுள்ளது.

TAGS: