ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி விகாரத்தில், அப்பட்டமான பொய் கூறுவது யார்? பிரதமரா?

XavierJayakumar-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், மார்ச் 16, 2013.

சிலாங்கூர்  மாநில அரசின் கண்டிப்பால்  ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்த உண்மையை மறைக்கப் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில்,  அப்பட்டமான  பொய்யைச் செய்தியாகப் பத்திரிக்கைகளுக்கு வழங்கியவர் தனது விவரத்தை வெளியிடுவாரா?

அச்செய்தியை வெளியிட்டவர், அதனைப் பிரதமர் கூறிய செய்தி போன்று வெளியிட்டு, பிரதமருக்குப் பொய்யர் என்ற அவப்பெயரை ஏற்படுத்த முற்பட்டுள்ளாரா?

மத்திய அரசின் மலேசிய ரப்பர் வாரியத்திற்குச்  சொந்தமான ஆர்.ஆர்.ஐ தோட்டத்தை ஆரம்பத்தில் விற்பனை செய்ய சிலாங்கூர் மாநில அரசு அனுமதியளிக்கவில்லை என்பது உண்மை. அது அத்தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு, அங்குள்ள தமிழ்ப்பள்ளி,  இந்து ஆலயம், இஸ்லாமியப்பள்ளி, மசூதி போன்றவைகளுக்கு முறையான மாற்று இடம் அல்லது  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற, ஒரு சுமூகத் தீர்வை நில மேம்பாட்டாளர்கள்  வழங்கத் தவறியதால்,  அங்கு வாழும் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப  மாநில அரசு செயல் பட்டது.

அதனால்  ஆர்.ஆர்.ஐ தோட்டம் மற்றும் ரப்பர் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகத் தலைவர், தொழிற்சங்கப் பிரதிநிதி, தமிழ்ப்பள்ளி நிர்வாகம், அப்பகுதி இந்திய சமூகத் தலைவர், அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  சிவராசா  ஆகியோருடன் பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின், தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம், ஆலயத்திற்கு நிலம், இஸ்லாமியப்பள்ளி, மசூதி மற்றும் தொழிலாளர்களுக்கு  வீட்டுமனை  ஆகியவை குறித்த  மக்களின் கோரிக்கையை அந்நிறுவனத்திடம் மாநில அரசு முன்வைத்தது.

அதில் ஆலயம், மசூதி மற்றும் தமிழ்ப்பள்ளி, இஸ்லாமியப்பள்ளிக்கான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட குவாச லேண்ட்  சென். பெர்ஹாட் மற்றும் ஆர். ஆர் ஐ நிர்வாகம் அவர்களின் தொழிலாளர்களின் வீட்டுமனை திட்டத்தை மட்டும் எதிர்த்தது.  அத்தொழிலாளர்களை  அரசாங்க நிறுவனத் தொழிலாளர்களாகக் கருதுவதாகவும். அவர்கள் வீடு மற்றும் வேலை மாற்றும் குறித்த  அரசாங்க வழிக்காட்டி Bil 4, 1995 ம் ஆண்டின் கோட்பாடுகளுக்கு ஏற்ப நடத்தப்படும், அங்குள்ள தொழிலாளர்களை நாட்டின் மற்றப் பகுதிகளுக்கு மாற்ற விருப்பதாகவும், சாதாரணத் தோட்டத் தொழிலாளர்களுக்கு  உள்ள நடைமுறையைக் காட்டிலும் இது மாறுபட்டது என்றும் வாதாடினர்.

இறுதியாகத் தமிழ்ப்பள்ளிக்கான 6 ஏக்கர் நிலத்திற்கு உத்தரவாதக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட  நிறுவனம் மாநில அரசுக்குக்  கொடுத்த பின்பே தோட்டத்தைத் துண்டாட மாநில அரசு  அனுமதியளித்தது.  அதன் படி,  இப்பொழுது பள்ளி  இருக்கும் இடம்  இன்னும்  மத்திய அரசாங்கத்தின்,  மலேசிய ரப்பர் வாரியத்திற்குச் சொந்தமானது. அதில் பத்து ஏக்கரில் கூடத் தமிழ்ப்பள்ளிக்கூடம் கட்ட மத்திய அரசால் முடியும், அதற்கான நில மேம்பாட்டுத்திட்ட  மற்றும் வடிவமைப்பு திட்டங்களைச் சமர்ப்பித்தால்  உடனடியாக அதற்கான அனுமதியை வழங்கிட  மாநில அரசு தயார்.

மர்மம் என்ன?

கரையான் அரிப்பில் ஒரு பகுதி கூரையை இழந்த பாதுகாப்பற்ற அப்பள்ளியின் கட்டுமானத்தை  தமிழ்ப்பள்ளி இப்போது இருக்கும்  இடத்தில் உடனே கட்டுவதை விடுத்து,  அதனை நஜிப்பின் பாரிசான் அரசு, குவாச லேண்ட்  சென். பெர்ஹாட் வாங்கும் நிலத்திற்குத் தள்ளிவிடுவதும், அதனைக் கட்டுவதற்குத் தனியார் நிறுவனம்  மானியம் தரவேண்டும் என்பதிலுள்ள மர்மம் என்ன?

ஏன் பந்து விளையாட்டு?

மலேசிய ரப்பர் வாரியத்திற்கு  இன்னும் சொந்தமாகவுள்ள 500 ஏக்கர்  நிலத்தில் 6 ஏக்கர் நிலத்தை உழைத்து  உருக்குலைந்த இந்திய  சமுதாயத்தின் கல்வி தேவைக்கு ஏன் பிரதமர் நஜிப் ஒதுக்கக் கூடாது? ஏன் தமிழ்ப்பள்ளியை மலேசிய ரப்பர் வாரியமும் – மேம்பாட்டு நிறுவனமுமான  குவாசா லேண்ட் சென். பெர்ஹாட்டும் பந்து விளையாட வேண்டும்?. அரசாங்க நிலமும், மானியமும் தமிழ்ப்பள்ளிக்குப் பயன்படுத்தப் பட்டால் நஜிப்பின் அரசாங்கத்திற்குப்  பெரிய பாவம் வந்து சேருமா அல்லது அரசியல் துன்பம் ஏதும் ஏற்படும் என்று தவிக்கிறாரா?

ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட பொறுப்பற்ற நடவடிக்கையில் ஈடுபடும் இவ்விரு அரசாங்க நிறுவனங்களும், சிலாங்கூரில் பக்காத்தான் மாற்று முன்னணி ஆட்சியமையாமலிருந்தால், தமிழ்ப்பள்ளியின்  தேவையைக் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விவகாரம்.  சுமார் மூவாயிரம்  ஏக்கர் நிலத்தில் மேம்பாட்டை ஏற்படுத்தவிருக்கும் குவாசா நிறுவனம், தமிழ்ப்பள்ளியை எந்த மூலையில் கொண்டு தள்ளப் போகிறது?

மாநில அரசுக்கு அந்தப் பள்ளியைக் கட்டக் கூடிய இடம் மற்றும் பள்ளியின்  தோற்றம் குறித்து அங்கீகாரத்துக்கு அனுப்பி விட்டதாகப் பொய் அறிக்கை விடுபவர்கள், அதற்கு முன் அப்பள்ளியின் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்காவது, அதனை காட்டினரா? அது குறித்து அவர்களிடம் விவாதித்துள்ளனரா? புதிய இடம் எங்கே? எப்படிப்பட்ட கட்டடம்? அதனைப் பெற்றோர்கள் ஏற்று அங்கீகரித்து விட்டனரா என்பதனைப் பள்ளி நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். அதனால் உண்மை எது, பொய் என்ன என்பதை மக்கள்  உணர்ந்து கொள்வார்கள்.

TAGS: