2012ம் ஆண்டுக்கான சொஸ்மா எனப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 104 பேரில் ஜமாலுல் கிராமின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர் என சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்தக் குடும்ப உறுப்பினர்கள் இந்த நாட்டில் வேறு பெயர்களுடன் வசித்துள்ளனர். பிலிப்பின்ஸில் அவர்கள் வேறு அடையாளங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
பெல்டா சஹாபாட் 16ல் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சுல்கிப்லி காசிமுடன் கூட்டாக நடத்திய நிருபர்கள் சந்திப்பில் ஹம்சா பேசினார்.
பாதுகாப்புப் படைகள் கிராம் குடும்ப உறுப்பினர்களை மட்டுமின்றி பிப்ரவரி 12ம் தேதி சபாவுக்குள் ஊடுருவிய மற்ற பயங்கரவாதிகளையும் குறி வைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
“பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மற்றவர்களையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்,” எனத் தெரிவித்த அவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் எப்போது நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்பதைத் தெரிவிக்கவில்லை.