-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மார்ச் 17, 2013.
தனியார் துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் மறைவினால் அவர் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கும் துன்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாட்டிற்காகவும், நீதிக்காகவுமான அவரின் போராட்டத்தில் உயிர் நீத்த அன்னாரின் ஆத்மா சாந்தியடை பிராத்திக்கிறேன். அவரின் பணி, நீதிக்கான அவரின் போராட்டங்கள் நீண்டகாலத்திற்கு இந்நாட்டு மக்களால் போற்றப்பட வேண்டிய ஒன்று.
குறுகிய பொருளாதார இலாபத்திற்காக இச்சமுதாயத்தை விற்கும் வீணர்களிடையே, அரசியல் இலாபத்திற்காக நாட்டையே அன்னியர்களுக்குத் தாரைவார்க்கும் கூட்டத்தினரிடையே, தனக்கு தொழில் முறையில் சிறிது அறிமுகமான ஒரு மங்கோலிய பெண்ணான அல்தான்துயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மலேசியா திரும்பினார்.
அவர் மூச்சு திணரலில் இறக்க வில்லை. நீதிக்கான உண்மையான போராட்டத்தில் உயிர் நீத்தார். தனது உயிருக்கும், பாதுகாப்புக்கும் உள்ள ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல், கொலையுண்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்ற போராட்டத்தில் பி.பாலசுப்ரமணியம் தன் இனிய உயிரை அர்ப்பணித்துள்ளது மலேசிய இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கக் கூடியதாக மட்டுமில்லாமல், மனித குலத்திற்கே ஒரு கௌரவத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நாட்டுக்குப் பெருமை சேர்க்கத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களின் நீண்ட பட்டியலில் பி.பாலசுப்ரமணியமும் சேர்ந்து கொண்டார். அல்தான்துயாவின் மரணத்திற்கு மட்டும் நீதியின் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்றில்லாமல், இன்று தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரு போலீஸ் அதிகாரிகளை அப்பாவிகள் என்று குறிப்பிட்டு, அந்தப் போலீஸ்காரர்கள் செய்யாத குற்றத்திற்குத் தூக்கிலிடுவதும் தடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
எதற்கு எடுத்தாலும் இனவாதம் பேசி மக்களைப் பிரித்தாலும் வர்க்கத்தினருக்கு இடையில், மனித குலத்தின் நீதிக்கான போராட்டத்தில் உயிர் நீத்த பி.பாலசுப்ரமணியத்தின் செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது. ”அரசாங்கத்தை மாற்றியாவது நீதியை வாழவைப்போம், வழக்கை மீண்டும் நடத்தலாம், அப்போது தெரியும் யார் உண்மையான குற்றவாளி என்பது” என்று குறிப்பிட்டுள்ளது ஓர் இந்திய மலேசியன் என்ற ரீதியில் அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
இந்நாட்டில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரையே அர்ப்பணிப்பு செய்துள்ளது என்றும் போற்றப்பட வேண்டியது. அல்தான்துயா விவகாரத்தில் பி.பாலசுப்ரமணியம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டாவது சத்தியப் பிரமாணத் தயாரிப்புக்கு நாட்டுப் பிரதமர் ஒரு முன்னணி வழக்கறிஞரான சிசிலுக்கு உத்தரவிட்டார் என்ற செய்தியும் தனியார் துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் மறைவினால் வெளிவந்துள்ளது. வழக்கறிஞர் மன்ற ஆண்டு கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர் அமெரிக் சித்து இந்தக் கடுமையான விவகாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் சட்டம், நீதி, காவல், ஜனநாயகம், நிர்வாகம், பொருளாதாரம் என்று சகல துறைகளுக்கும் காவலனாக இருக்க வேண்டய பிரதமர் போலியான ஓர் ஆவணத்தை தயாரிக்க ஆணையிட்டார் என்று அவரின் சொந்த வழக்குரைஞரான சிசில் ஒப்புக் கொண்டுள்ளது உலகில் நடக்கும் மிக அரிதான ஒரு செயலாகும்.
நம்பிக்கையின் நட்சத்திரமாக இருக்க வேண்டியவர், இந்நாட்டு நீதித் துறைக்கும், மக்களுக்கும் மிக மோசமான அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்துறையும், போலீசாரும் இந்தக் குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வெளிநாடுகளில் இத்தேசத்தின் கௌரவத்திற்கும், நம்பிக்கைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகக் கடுமையான பாதகத்தைச் சரி செய்ய வேண்டும்.