‘இதோ நஜிப்பின் ஏழு பெரிய பாவங்கள்’

najib“அந்தப் பாவங்கள் மிக மிக நீளமானவை. அதானல் அவற்றைப் புத்தகமாக வெளியிடுவது பற்றி எதிர்த்தரப்பு பரிசீலிக்க வேண்டும். அந்தப் புத்தகம் நிச்சயம் நல்ல விற்பனையாகும்”

எதிர்த்தரப்பின் ஏழு பெரிய பாவங்கள் பற்றி நஜிப்

கேஎல்: முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிப்பது பக்காத்தான்  ராக்யாட்டின் ஏழு பாவங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதனை சபா மக்களிடமும் சரவாக் மக்களிடமும் சொல்வதற்கு நஜிப்புக்குத் துணிச்சல் இருக்கிறதா ?

நஜிப்பின் கருத்துப்படி பிஎன் -னும் பிஎன் அரசியல்வாதிகளும் வழக்கமாகச் செய்கின்ற ஊழல் போன்ற நடவடிக்கைகள் பாவம் அல்ல

கைரோஸ்: இப்போது மிகவும் தெளிவாகி விட்டது. அதனைப் பிரதமர் தெளிவுபடுத்தி விட்டார். அவர் பிரதமராக இருந்தால் அல்லது அம்னோவைச் சேர்ந்த யார் பிரதமராக இருந்தாலும் மலேசியாவில் உள்ள கிறிஸ்துவர்கள் தங்கள் இறைவனை வணங்குவதற்கு ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிலையே கடைப்பிடிக்கப்படும்.

கிழக்கு மலேசியாவில் பாஹாசா மலேசியாவைப் பேசும் பூமிபுத்ரா கிறிஸ்துவர்களுக்கு இது நேரடி சவாலாகும்.  ஆகவே அவர்கள் எப்படி தொடர்ந்து பிஎன் -னுக்கு வாக்களிக்க முடியும் ?

அவர்கள் தொடர்ந்து அதனைச் செய்தால் அவர்கள் ஊமையாக இருக்க வேண்டும் அல்லது பல ஆண்டுகள் மிரட்டப்பட்டதால் துணிச்சல் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

கோச்சா: நஜிப் அவர்களே தயவு செய்து மக்களை முட்டாளாக்க வேண்டாம். ‘அல்லாஹ்’ என்ற சொல் இஸ்லாத்துக்கு முந்திய சமஸ்கிருத வார்த்தையாகும். அதற்கு ‘இறைவி’ என அர்த்தம்.

இந்துக்களும் சீக்கியர்களும் ‘அல்லாஹ்’ சொல்லைப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம் அல்லாதார் அந்த சொல்லைப் பயன்படுத்துவது பாவம் என நீங்கள் எப்படிச் சொல்ல முடியும் ?

மத்திய கிழக்கிற்குச் சென்று சமயத்தைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு கூட அவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது எனச் சொல்வதில்லை.

மாற்றம்: எதிர்த்தரப்பின் ஏழு ‘பெரிய’ பாவங்கள் என நஜிப் சொன்னதை நான் மீண்டும் எழுதுகிறேன்:

1. ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதித்தது ( இந்த திடீர் மாற்றம் வரையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பிஎன் அதனைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது )

2. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ( எந்த ஆதாரத்தையும் காட்டாமல் வெறுமனே அறிக்கை விடுவது)

3. லாட்ஜிங் ஹைலண்ட்ஸில் டிஏபி தலைவர்கள் நிலத்தைப் பெற அனுமதித்தது ( புக்கிட் ராஜாவில் சிலாங்கூர்  அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோபியா அப்துல்லாவுக்கு 223 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. சிலாங்கூரில் பிஎன் உறுப்புக் கட்சிகள் அதிக மதிப்புள்ள நிலத்தை பிஎன் உறுப்புக் கட்சிகள் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட்டுக்கு வாங்க அனுமதித்தது)

4. ஹைலண்ட்ஸ் காடுகளை துப்புரவு செய்ய அனுமதித்தது ( இதுவும் எந்த ஆதாரத்தையும் காட்டாமல் வெறுமனே அறிக்கை விடுவது)

5. பாஸ் கட்சி தனது சொந்தப் போராட்டத்தையே விட்டுக் கொடுத்து விட்டது (விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்)

6. லஹாட் டத்து பயங்கரவாத ஊடுருவல் தொடர்பில் பத்து எம்பி தியான் சுவா செய்த பாவம்

7. பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கு இடையில் வினோதமான அரசியல் ஒத்துழைப்பு ( அது  விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் )

இந்தக் கறையை மட்டும் தான் நஜிப்பும் பிஎன் -னும் பக்காத்தான் மீது சுமத்த முடியும் என்றால் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே நல்ல கட்சிகளாகி விட்டன.

சின்ன அரக்கன்: பக்காத்தான் ராக்யாட் முப்பது ஆண்டுகளாக பிஎன் கூட்டணி செய்து வரும் பாவங்களைப் பட்டியலிட வேண்டும்.

அந்தப் பாவங்கள் மிக மிக நீளமானவை. அதானல் அவற்றைப் புத்தகமாக வெளியிடுவது பற்றி எதிர்த்தரப்பு பரிசீலிக்க வேண்டும். அந்தப் புத்தகம் நிச்சயம் நல்ல விற்பனையாகும். மலேசியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனையாகும்.

சைமன்: நீங்கள் சொல்வது பக்காத்தான் ஏழு பெரிய பாவங்களைச் செய்திருந்தால் பிஎன் ஏழு மில்லியன் பாவங்களைச் செய்துள்ளது. அதனால் யாரும் பிஎன் -னுக்கு வாக்களிக்கக் கூடாது.

நீங்கள் வெளிப்படைத்தன்மையைப் பற்றிப் பேசுகின்றீர்கள். இருந்தும் எந்த டெண்டரும் இல்லாமல் ஸாக்கி  எஞ்சியனிரிங் நிறுவனத்துக்கு பில்லியன் ரிங்கிட் குத்தகையைக் கொடுக்கின்றீர்கள். நீங்கள் எந்த வெளிப்படைத்தன்மையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். மக்களை முட்டாளாக்க முடியும் என எண்ணுகின்றீர்களா ? மீண்டும் சிந்தியுங்கள்.

சிப்முங்: ஆகவே நஜிப் இப்போது உலாமா அல்லது உஸ்தாஸாக விரும்புகிறாரா ? நஜிப் செய்துள்ள பாவங்கள் இதோ:

1. தற்காப்பு அமைச்சராக இருந்த போது ஆயுதத் தளவாடங்கள் மீது பணம் பண்ணியது

2. மூழ்க முடியாத நீர்மூழ்கிகளை வாங்கியது

3. அல்தான்துயா ஷாரிபு மரணத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது

4. BR1M (ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை) போன்றவை வழி மக்களுக்கு லஞ்சம் கொடுப்பது

5. பெர்சே சட்டவிரோதமானது என பிரகடனம் செய்தது

6. இன வெறுப்பு செய்திகளை மதியுரையாளர் டாக்டர் மகாதீர் முகமட்டை அனுமதித்தின் மூலம் இனங்களுக்கு இடையில் பிளவை அதிகரித்தது.

7. குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது குற்றம் சாட்டியது; பட்டியல் நீளும்.

உங்கள் அடிச்சுவட்டில்: நஜிப் இப்போது ஏழு பாவங்கள் பற்றிப் பேசி மகாத்மா காந்தியைப் பின்பற்ற  விரும்புகிறார். காந்தி கூறிய பாவங்கள் பிஎன் -னுக்கும் அதன் தலைவர்களுக்கும் மிகவும் பொருந்தும். அவை இதோ:

1. வேலை இல்லாத வளப்பம் ( வழக்கமானதாக தெரிகிறது)

2. மனச்சாட்சி இல்லாத பொழுதுபோக்கு

3. பண்பாடு இல்லாத நடத்தை

4. நெறிமுறை இல்லாத வர்த்தகம்

5. மனிதநேயம் இல்லாத அறிவியல்

6. தியாகம் இல்லாத சமயம்

7. கொள்கை இல்லாத அரசியல்

 

TAGS: