PNB ஊழியர்களுக்கு கூடுதல் போனஸை பிரதமர் அறிவித்தார்

najibPNB எனப்படும் Permodalan Nasional Berhad-ன் 200,000 நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கு 2012ம் ஆண்டுக்குக் கூடுதலாக மேலும் ஒரு மாத போனஸ் வழங்கப்படும்.

அதனை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அந்த PNB குழுமத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடுமையாக உழைக்கவும் கடந்த 35 ஆண்டுகளில் அடைந்த சாதனையை மேலும் தொடரவும் அந்த கூடுதல் போனஸ் உற்சாகமூட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“அந்தப் போனஸ் ஏற்கனவே 2012க்கு அறிவிக்கப்பட்ட போனஸுக்கு மேல் கொடுக்கப்படுகிறது. மிக நன்றாக இயங்கும் PNB குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு அவ்வாறு செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்த போனஸ் மூலம் ஊழியர்கள் இன்னும் கடுமையாக உழைப்பர் என நான் நம்புகிறேன்,” என நேற்றிரவு செர்டாங்கில் நடைபெற்ற 35வது PNB ஆண்டு நிறைவு விருந்தில் கூறினார்.

அந்த விருந்தில் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் PNB தலைவர் அகமட் சார்ஜி அப்துல் ஹமிட்டும் PNB தலைமை நிர்வாக அதிகாரி ஹமாட் பியா சே ஒஸ்மானும் கலந்து கொண்டிருந்தனர்.

PNB ஊழியர்களுடைய 23 வயதுக்கு உட்பட்ட 2,434 பிள்ளைகள் இவ்வாண்டு Amanah Saham 1Malaysia பங்குகள் வழியாக ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரிங்கிட் கொடுக்கப்படும் என்ற தகவலையும் நஜிப் அப்போது அறிவித்தார்.

 

TAGS: