ஹுடுட் விவகாரத்தை முஸ்லிம் அல்லாதாருடன் விவாதியுங்கள் என பாஸ் கட்சிக்கு வேண்டுகோள்

கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் பாஸ் கட்சி, கூட்டரசு அரசியலமைப்பையும் கட்சியின் அமைப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என அந்தக் கட்சிக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பை பின்பற்றுவதாக அந்தக் கட்சியின் அமைப்பு விதிகள் கூறுகின்றன. அதில் ஹுடுட் சட்ட அமலாக்கமும் அடங்கும் என பாஸ் ஆதரவாளர் மன்றத் தலைவர் ஹு பாங் சியூ கூறினார்.

ஹுடுட் சட்டத்தை பாஸ் தலைமைத்துவம் தொடர்ந்து அமலாக்க விரும்பினால் அது தமது மன்றத்தில் உள்ள உறுப்பினர்களுடனும் முஸ்லிம் அல்லாதவர்களுடனும் விவாதிக்கவும் வேண்டும்.

“பாஸ் கட்சி தனது நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் நடவடிக்கையும் கூட்டரசு அரசியலமைப்பு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் அமைப்பு விதிகள் கூறுகின்றன. ஆகவே ஹுடுட் அமலாக்கத்தில் பாஸ் தலைவர்கள் அதனைப் பின்பற்றுவது நல்லது,” என ஹு சொன்னார்.

“என்னைப் பொறுத்த வரையில் புத்ராஜெயாவை பாஸ் கட்சியும் பக்காத்தானும் கைப்பற்ற விரும்பினால் வாழ்வு ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ஹுடுட்டைக் காட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். ஆகவே ஹுடுட் விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தால் விரும்பிய இலட்சியத்தை அடைய முடியாது.”

ஹுடுட் விவகாரம் தொடர்ந்து எழுப்பப்பட்டு, முறையாக விளக்கப்படா விட்டால் பாஸ் ஆதரவாளர் மன்ற உறுப்பினர்கள் வெளியேறக் கூடிய சாத்தியம் குறித்த ஊடகத் தகவல்களினால் தாம் கவலை அடைந்துள்ளதாகவும் ஹு குறிப்பிட்டார்.

“ஹுடுட் அமலாக்கம் குறித்து சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கவலையை பாஸ் தலைமைத்துவத்திற்கு  நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

ஹுடுட், சட்டமாக்கப்பட்டால் பாஸ் ஆதரவாளர் மன்றத்திலிருந்து உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறக் கூடும் என ஹு எச்சரித்ததாக மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: