ராஜா மூடா சூலு அக்பிமுடின் என்னும் அஸ்ஸிமுடி கிராம் ஒரு மலேசியரே, அவர் சாபா, கூடாட்டில் உதவி மாவட்ட அதிகாரியாகக்கூட பணியாற்றியிருக்கலாம். இவ்வாறு பிகேஆர் கூறிக்கொள்கிறது.
சாபாவில் கடந்த மாதம் ஊடுருவல் தொடங்கியதிலிருந்து யார் இந்த அஸ்ஸிமுடி என்ற கேள்வி எழுந்தது என்று கூறிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அவரைப் பற்றிப் பல வதந்திகளும் உலவுகின்றன என்றார். சாபா மக்களில் பலர் அவரைத் தெரியும் என்கிறார்கள்.
“பிகேஆர் துணை தலைமைச் செயலாளர் டேரல் ஐகிங், தேசிய ஆவணக் காப்பகத்தில் 1975 அரசுப் பணியாளர் பட்டியலைத் தேடிப்பார்த்ததில், உதவி மாவட்ட அதிகாரி ஒருவர் டத்து அக்பிமுடின் கிராம் என்ற பெயரைக் கொண்டிருந்தது தெரிய வந்தது ”, என்றாரவர்.
“அக்பிமுடின் உண்மையிலேயே ஒரு மலேசியர்தானா, அவர் புரொஜெக்ட் ஐசி வழி குடியுரிமை பெற்றவரா, சாபாவில் உள்ள சூலு மக்களில் பெரும்பாலோரைப்போல் அவரும் அம்னோ உறுப்பினர்தானா என்பதையெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் விளக்க வேண்டும்”, என்று ரபிஸி கேட்டுக்கொண்டார்.
“லாஹாட் டத்து ஊடுருவலைத் தொடர்ந்து பிகேஆர் அங்குள்ள மக்களுடன் பேசி, அக்பிமுடின் அல்லது அஸ்ஸிமுடி உள்பட ஊடுருவல்காரர்களின் தலைவர்கள் பற்றிப் பல தகவல்களைப் பெற்றது”, என்றுரைத்த ரபிஸி அக்பிமுடின் 1941-இல் பிறந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டதாகக் கூறினார். எனவே, அவருக்கு இப்போது வயது 72 ஆகும்.
‘நஜிப் விளக்க வேண்டும்’
மக்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதால் நஜிப் இதை மறுக்கவோ மூடி மறைக்கவோ இயலாது விளக்கம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றார் ரபிஸி.
அரசுப்பணியாளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவரும் ஆயுதக் கும்பலுக்குத் தலைமையேற்றிருப்பவரும் ஒருவர்தான் என்பதை எப்படி நிச்சயமாகக் கூற முடிகிறது என்று வினவியதற்கு கூடாட் நகர மக்களுடன் பேசியதிலிருந்து அதை அறிந்துகொண்டதாக ரபிஸி கூறினார்.
“கூடாட்டில் உள்ள பலருக்கு அக்பிமுடினைத் தெரிந்திருக்கிறது. அவர்களுடன் பேசும்போது அவர்கள் அவரை நினைவுகூர்கிறார்கள்.
“அவர் இப்போதும் லாஹாட் டத்துவில் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் ஆயுதக் கும்பலின் ஒரு முக்கிய புள்ளி அவர்”, என்றவர் வலியுறுத்தினார்.
அக்பிமுடின் உதவி மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றியது உண்மையா இல்லையா என்பதை சாபா முதலமைச்சர் மூசா அமானும் தெளிவுபடுத்த வேண்டும் என ரபிஸியும் டேரலும் விரும்புகின்றனர்.
அக்பிமுடினுக்கு இப்போது வயது 72 என்றால், அவர் 1990-களில் பணி ஓய்வு பெற்று பிலிப்பீன்சுக்குத் திரும்பிச் சென்று இப்போது ஊடுருவலுக்குத் தலைமையேற்று திரும்பி வந்திருக்கலாம் என்று ரபிஸி கூறினார்.