மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியின் தலைவர் நசிர் ரசாக், தம் மூத்த சகோதரரே மீண்டும் பிரதமராவதை ஆதரித்து பேசியுள்ளார்.
“நடப்பு பிரதமர் பொருளாதாரத்தை உருமாற்றம் செய்வது தொடர்பில் தெளிவான திட்டத்தைக் கொண்டிருக்கிறார்”, என சிஐஎம்பி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி நசிர் (வலம்) புலூம்பெர்க் தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார்.
“மாற்றம் எதுவும் ஏற்படுமானால், அது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமையும். அவர்கள் மலேசியாமீது கொண்டுள்ள கருத்தை மறுபரிசீலனை செய்வார்கள்”, என்றாரவர்.
அவரின் தமையனார் நஜிப் அப்துல் ரசாக், எதிர்வரும் தேர்தலில் கடுமையான போட்டியை எதிர்நோக்குவார் எனத் தெரிகிறது. 2008 பொதுத் தேர்தலில் மிகக் குறுகிய வெற்றியைத்தான் அவருடைய பிஎன் பெற்றது.
மாற்றரசுக் கட்சி ஊழல்-எதிர்ப்பை முக்கிய தளமாக வைத்து பரப்புரை செய்துவருகிறது. அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் மாற்றரசுக் கட்சி வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.