சாபா ஊடுருவலில் ஈடுபட்டுள்ள பிலிப்பினோக்களில் எத்தனை பேர் மலேசிய ஐசி (அடையாள அட்டை) வைத்திருக்கிறார்கள் என்பதைப் பிரதமர் தெரியப்படுத்த வேண்டும் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அக்பிமுடின் @ அஸ்ஸிமுடி கிராம் ஒரு மலேசியர் என்றும் அவர் முன்பு சாபாவின் கூடாட்டில் உதவி மாவட்ட அதிகாரியாக பணியாற்றினார் என்றும் கூறப்பட்டிருப்பதை அடுத்து அவர் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
“ஆயுதக் கும்பலின் பேச்சாளர் ஒருவர், அஸ்ஸிமுடி கிராம் முன்னாள் மாநில அரசு அதிகாரி என்று உறுதிப்படுத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது”, என்று ரபிஸி இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
“அஸ்ஸிமுடி கிராம் ஒரு மலேசியக் குடிமகன் என்றால் அவருக்கு நீலநிற ஐசி கொடுத்தது யார்?
“ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களில் இன்னும் எத்தனை பேர் நீலநிற ஐசி வைத்துள்ளனர்?”, என்றவர் வினவினார்.
நேற்று, பிலிப்பினோ இணையதளமான InterAksyson, அஸ்ஸிமுடி (இடம்) கூடாட்டில் மாவட்ட அதிகாரியாக இருந்தது உண்மைதான் என்று சூலு சுல்தான் அலுவலகப் பேச்சாளர் “உறுதிப்படுத்தினார்” என செய்தி வெளியிட்டிருந்தது.
அஸ்ஸிமுடி கூடாட்டில் அரசு அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் பிலிப்பினோ குடியுரிமைதான் வைத்திருந்தார் என்றும் அவருக்கு மலேசியக் குடியுரிமை கொடுக்கப்படவில்லை என்றும் அப்பேச்சாளர், அப்ரேஹம் இட்ஜிரனி கூறினார்.
“அவர்கள் (அஸ்ஸிமுடி) ‘எங்களுக்குக் குடியுரிமை கொடுங்கள்’ என்று கேட்டனர், அதற்கு சாபா அதிகாரிகள் ‘உங்களுக்கு (குடியுரிமை) கொடுக்கவில்லை என்றால் என்ன, சாபா உங்களுக்குச் சொந்தமானதுதானே’ என்றார்களாம்”. இட்ஜிரனி இவ்வாறு சொன்னதாக அந்த இணையத்தளம் கூறிற்று.
ஆனால், இன்று ரபிஸியைத் தொடர்புகொண்டபோது அவர் அஸ்ஸிமுடி மலேசியக் குடியுரிமை வைத்திருந்தார் என்பதைத் திரும்பவும் வலியுறுத்தினார். அஸ்ஸிமுடி உதவி மாவட்ட அதிகாரியாக இருந்தபோது அவரைப் பற்றி அறிந்தவர்கள் சொன்னதை வைத்து இதைத் தெரிந்துகொண்டதாக அவர் சொன்னார்.
“அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் சாபா அரசுப்பணியாளர்கள் பட்டியலை அலசி ஆராய்ந்து அவருடைய பெயர் பட்டியலில் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.
“அப்போது சாபா வந்த பிலிப்பினோக்கள் பலர், இரட்டைக் குடியுரிமை வைத்திருந்தனர். இங்கு இருக்கும்போது அவர்கள் மலேசியர்களாக இருப்பர்; பிலிப்பீன்ஸ் சென்றதும் பிலிப்பினோக்கள் ஆகிவிடுவர்”, என்று ரபிஸி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அஸ்ஸிமுடி மலேசிய அரசுப்பணியில் இருந்தவர் என்பதை ரபிஸி, நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். அதற்குச் சான்றாக டத்து அக்பிமுடின் கிராம் என்ற பெயர் கொண்ட ஒருவர் 1974-இல் கூடாட்டில் மாவட்ட அதிகாரியாக பணிபுரிந்தார் என்று குறிப்பிடும் ஆவணம் ஒன்றையும் காண்பித்தார்.