இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது; மலேசியா நழுவல்!

UNHRC_newஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

25 ஓட்டுகள் பெற்று அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து பேசிய இலங்கை தூதர், அமெரிக்க தீர்மானம் எற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நிறைவேறியதாக ஜெனீவாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இறுதிக் கட்டப்போரின் போது நடந்திருக்கக்கூடிய போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கோரியது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன. எனினும் அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமல் இருக்கின்றமை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பெரும் விசனங்கள் வலுத்துவருகின்றன.

mahintha_najibபோருக்குப் பின்னரும் நாட்டில் மனித உரிமை மீறல்களும் கடத்தல்களும் ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அதிகரித்துவருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மலேசியா ஆதரவளிக்க வேண்டும் என தொடர் போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள், பேச்சுவார்த்தைகள் வழி மலேசியத் தமிழர்கள் தங்களது கோரிக்கையை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தியபோதும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளமல் மலேசிய அரசாங்கம் நழுவிக்கொண்டுள்ளதானது, இலங்கையில் செய்துள்ள முதலீட்டுக்காக 20 இலட்சம் மலேசியத் தமிழர்களுடைய உணர்வுகளை நஜிப் தலைமையிலான மலேசிய அரசு கொச்சைப்படுத்தி விட்டதாக பூச்சோங்கிலிருந்து செம்பருத்தி இணையத்தளத்திற்கு தொலைபேசி வழி தொடர்புகொண்ட கந்தசாமி மாயன் என்பவர் ஆவேசமாக கூறினார்.

இது தமிழர்களுக்கு விழுந்த பெரும் அடி. இதில் ஏற்பட்டுள்ள காயம் ஆறவே ஆறாது. இந்நாட்டு குடிமக்களாகிய மலேசியத் தமிழர்களின் குரலை ஒரு பொருட்டாக கருதாமல் இலட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவுடன் தொடர்ந்து உறவாட காய் நகர்த்தியுள்ளது இந்த மனித நேயமற்ற மலேசிய அரசாங்கம்.

மலேசியத் தமிழர்களுடைய உணர்வுகளை நஜிப் தலைமையிலான அரசாங்கம் எந்த வகையில் மதித்துள்ளது என்பதற்கு இது ஒரு நல்லதொரு உதாரணம் என்று கூறிய கந்தசாமி, வருகின்ற 13-ஆவது  பொதுத்தேர்தலில் நாங்கள் திருப்பி அடிப்போம். தமிழர்களை செல்லா  காசாக நினைத்த இவர்களுக்கு நாங்கள் கொடுக்கபோகும் அடி பலமான அடியாகவே இருக்கும் என்றார்.

TAGS: