அம்னோ சார்பு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ ஒர் ஆவி வாக்காளர் என்றும் அவர் அம்பாங்கிலும் வாங்சா மாஜுவிலும் வாக்களிக்க முடியும் என்றும் பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது.
பாப்பாகோமோ அல்லது வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ்-ன் அடையாளக் கார்டு எண்களைப் பயன்படுத்தி
தேர்தல் ஆணை (இசி) இணையத்தளத்தில் தேடிய போது கிடைத்த விவரங்கள் அடிப்படையில் அவ்வாறு
சொல்வதாக அந்தக் கட்சி தெரிவித்தது.
வான் முகமட் அஸ்ரி இரண்டு அடையாளக் கார்டுகளை வைத்துள்ளதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி
இஸ்மாயில் தெரிவித்தார். அவற்றில் ஒன்று அவர் போக்குவரத்துப் போலீசில் கார்ப்பரெலாக இருந்த போது
வழங்கப்பட்டதாகும். இன்னொன்று சிவிலியன் அடையாளக் கார்டு ஆகும்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் பாப்பாகோமோ வேலையிலிருந்து
நிறுத்தி வைக்கப்பட்டார். அந்தத் தீர்ப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முறையீட்டு நீதிமன்றம்
உறுதிப்படுத்தியது.
அந்த இரண்டு அடையாளக் கார்டுகளிலும் உள்ள முகவரிகள் ஒரே நபருடையது என்பதை சோதனைகள் காட்டியுள்ளதாக தெரிவித்த ராபிஸி, ஆவி வாக்காளர்கள் உள்ளனர் என பக்காத்தான் ராக்யாட் சொல்வதை அது நிரூபிக்கிறது என்றார்.
“இசி இணையத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளிலும் பிறந்த தேதி மட்டுமே வேறாக இருந்தது. என்றாலும் டானாவ் அடுக்குமாடி, தாமான் புக்கிட் அம்பாங் ஆகிய முகவரிகளைக் கொண்ட ஒரே நபர் என நாங்கள் நம்புகிறோம்.”
“பாப்பாகோமோ இரண்டு முறை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது ஆவி வாக்காளர்கள் இருப்பதைக்
காட்டுகின்றது.”
இசி அந்த விவகாரத்தை விளக்குவதோடு “அரசியல் எதிரிகள் மீது அவதூறுகளை வீசும் பாப்பாகோமோ
போன்று எத்தனை தனிநபர்களுக்கு வாக்களிக்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது,” என்பதையும் தெரிவிக்க
வேண்டும் என ராபிஸி கூறினார்.
‘இரண்டுமே ஒரே நபர் தான்’
வெவ்வேறு அடையாளக் கார்டுகள் இருந்தாலும் இரண்டுமே ஒரே நபர் தான் என பிகேஆர் உறுதியாக
நம்புவதாக ராபிஸி சொன்னார்.
பாப்பாகோமோ-வை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிமன்ற ஆவணங்கள்,
அவருடைய சிவிலியன் அடையாளக் கார்டு மீது அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் அனுப்பிய
கோரிக்கைக் கடிதம் கையாளப்பட்டது ஆகியவற்றின் அடிப்படையில் தமது எண்ணம் அமைந்துள்ளதாகவும்
அவர் கூறிக் கொண்டார்.
“அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டதும் அந்தக் கோரிக்கை மீது பாப்பாகோமோ தமது வலைப்பதிவில்
உடனடியாக கருத்துரைத்தார்,” என்றார் ராபிஸி.
அம்பாங்கில் வசிக்கும் பல தனி நபர்களை நான் நேரடியாகவே வினவினேன். அங்கு முகமட் அஸ்ரி என்ற
ஒரு கார்ப்பரெலை அவர்கள் நினைவில் வைத்துள்ளனர். நான் சந்தித்த மூவர் அதனை உறுதி செய்துள்ளனர்.”
அஞ்சல்களுக்கு பாப்பாகோமோ உண்மையான முகவரியைப் பயன்படுத்துவதும் சோதனை செய்த போது தெரிய வந்துள்ளது என்றும் ராபிஸி குறிப்பிட்டார்.
தமது கூற்றுக்கு ஆதரவாக நீதி மன்ற ஆவணங்கள் இருக்கின்றன என்றும் எதிர்காலத்தில் அவற்றைக்
காட்டுவதற்குத் தயங்கப் போவதில்லை என்றும் பிகேஆர் வியூக இயக்குநர் தெரிவித்தார்.
வான் முகமட் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் இரண்டு அடையாளக் கார்டுகளை வைத்திருக்கவும் வாக்களிக்கும் உரிமையை வைத்திருக்கவும் அவர் ஏன் அனுமதிக்கப்பட்டார் என்பதே இப்போதைய கேள்வி ஆகும்.
“2008ல் அவர் இரண்டு முறை வாக்களித்திருக்கலாம். அதனை நிறுத்தா விட்டால் அவர் 2013லும் அதனை மீண்டும் செய்யக் கூடும். அதற்கு இசி பதில் அளிக்க வேண்டும்,” என்றார் ராபிஸி.
அந்த விவகாரம் மீது ராபிஸி கூடுதல் விவரங்களைத் தர வேண்டும் என போலீசும் தேசியப் பதிவுத் துறையும் கேட்டுக் கொண்டுள்ளன.
தாமான் டானாவ் கோத்தாவில் உள்ள பாப்பாகோமோ-வின் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தில் கண்டுள்ள விஷயங்களை அவர் பின்பற்றத் தவறியதைத் தொடர்ந்து அன்வார் இப்ராஹிம் சார்பில் 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை வழக்குரை என் சுரேந்திரன் நேற்று சமர்பித்தார்.