முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி செய்த ‘பெரிய பாவம்’ 2008 ம் ஆண்டு 12வது பொதுத் தேர்தலில் பிரச்சார காலத்தை 13 நாட்களாக நீட்டித்தது என கல்வியாளர் ஒருவர் சொல்கிறார்.
தேர்தல் பிரச்சார காலம் நீட்டிக்கப்பட்டதால் நாட்டில் அரசியல் ‘சுனாமி’ ஏற்பட்டது. பிஎன் தனது பாரம்பரிய
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது என மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முகமட்
ரெட்சுவான் ஒஸ்மான் கூறினார்.
“அம்னோ ஆட்களுக்கு அது அப்துல்லா செய்த பெரிய பாவமாகும். 1999ல் எட்டு நாள் பிரச்சாரம் மட்டுமே
அனுமதிக்கப்பட்டது. அவ்வளவு தான்,” என பொதுத் தேர்தல் குறித்து நேற்று நிகழ்ந்த ஆய்வரங்கு ஒன்றில்
ரெட்சுவான் தெரிவித்தார்.
என்றாலும் அந்த 13 நாள் பிரச்சார காலம் குறைந்த பட்சம் 21 நாட்கள் பிரச்சாரத்துக்கு வழங்கப்பட வேண்டும்
என்ற பெர்சே கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
2008 அரசியல் சுனாமி குறிது பிரச்சார காலத்தின் கடைசி நான்கு நாட்களில் மட்டுமே உணரப்பட்டது எனக்
குறிப்பிட்ட ரெட்சுவான் மக்கள் உணர்வுகளில் பெருத்த மாற்றம் ஏற்பட்டதாகச் சொன்னார்.
என்றாலும் பிரதமர் 13வது பொதுத் தேர்தலில் தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்வார் எனத் தாம்
எண்ணுவதாக அவர் குறிப்பிட்டார். காரணம் பிஎன் வலுவான கூட்டணியாக தொடக்கத்திலிருந்து தன்னை
மெய்பித்துக் கொண்டு வந்துள்ளது.
“எதிர்க்கட்சிகள் பல இடங்களை வெல்லலாம். ஆனால் அவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள்
நிலவுகின்றன. அதனால் ஆளும் கூட்டணியை அவை அமைக்க முடியாமல் போகும்.”
இதனிடையே தேர்தல் முடிவுகள் 65 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சார்ந்துள்ளதாக மெர்தேக்கா மய்ய திட்ட
இயக்குநர் இப்ராஹிம் சுபியான் கூறினார்.
“மூன்று விழுக்காடு வாக்குகள் திசை மாறக் கூடும் என்ற அடிப்படையில் பார்க்கும் போது அந்த 65 இடங்கள்
எப்படியும் செல்லக் கூடும்.”
“ஆகவே முடிவுகள் எப்படி இருக்கும் எனக் கணிப்பது மிகவும் சிரமமாகும்.”
என்றாலும் 13வது பொதுத் தேர்தல் உடனடியாக அதாவது நாளைக்குக் கூட நடத்தப்பட்டாலும் பிஎன் கூட்டரசு
அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது நிச்சயம் என அவர் கருதுகிறார்.
“என்றாலும் மீண்டும் பிரச்சார காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.”
“ஒரு மாதத்திற்கு முன்பு எல்லோரும் ஊழல் பற்றியும் தேசிய வரவு செலவுப் பற்றாக்குறை பற்றியும் பேசிக்
கொண்டிருந்தார்கள். அடுத்து லஹாட் டத்து சம்பவம் நிகழ்ந்தது. முழுக் கவனமும் திசை மாறி விட்டது,” என
இப்ராஹிம் கூறினார்.