பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அடுத்த சில நாட்களில் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவுடன் மேலும் விவாதங்களை நடத்துவார். அந்தத் தகவலை அரசு சாரா அமைப்பான ஹிண்ட்ராப் இன்று வெளியிட்டது.
புத்ராஜெயாவில் இன்று நஜிப்புடன் நடத்தப்பட்ட ஒரு மணி நேர சந்திப்பு ‘பயனுடையதாக’ இருந்தது எனக் குறிப்பிட்ட ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன் மேல் விவரங்களைத் தர மறுத்து விட்டார்.
“நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுதான் மிக முக்கியமான விஷயம்,” என கணேசன் புத்ரா ஜெயா கூட்டத்திலிருந்து வெளியில் வந்த போது கூறினார்.
ஒரு மணி நேரச் சந்திப்பில் தீர்க்க முடியாத அளவுக்கு பிரச்னைகள் ‘மிகவும் சிக்கலாக’ இருப்பதால் மேலும் விவாதங்கள் தொடரும் என்றார் அவர்.
“அடுத்த சில தினங்களில் மேலும் விவாதங்களை நடத்த நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்,” எனத் தெரிவித்த கணேசன், அடுத்த கூட்டம் எப்போது நிகழும் என்பதைக் குறிப்பிடவில்லை. அந்தச் சந்திப்பில் ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தியும் கலந்து கொண்டார்.
ஹிண்டராப் முன்மொழிந்துள்ள பெருந்திட்டத்தை பிஎன் அல்லது பக்காத்தான் ராக்யாட் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் ரவாங்கில் உள்ள ஆலயம் ஒன்றில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.