கெடாவில் பாஸின் அளவுமீறிய நம்பிக்கையே அதற்குக் கேடாக அமையலாம்

1kedahதேர்தல் பார்வை : கெடாவில் பக்காத்தான் ரக்யாட் 15 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அள்ளிக்கொண்டு போகும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார். ஆனால், அது வெறும் கனவாகக்கூட போகலாம். ஏனென்றால் அங்கு பக்காத்தான் ஆட்டம் கண்டிருக்கிறது.

அந்த வட மாநிலத்தில் பக்காத்தான் ஒட்டுமொத்த நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெற்றிகொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பாடாங் தெராப், சிக், ஜெராய், ஜெர்லுன், அலோர் ஸ்டார் ஆகியவை பிரச்னைக்குரிய தொகுதிகளாகும்.

2008 பொதுத் தேர்தலில், அங்கு பக்காத்தான் 11 நாடாளுமன்றத் தொகுதிகளை (பாஸ் ஆறு, பிகேஆர் ஐந்து) வென்றது. பிஎன்னுக்கு 4 இடங்கள் கிடைத்தன.

ஒன்பது தொகுதிகளில் பக்காத்தான் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது: பாடாங் செறாய் (11,738 வாக்கு பெரும்பான்மை), சுங்கை பட்டாணி (9,381), பாலிங் (7,613), கோலா கெடா (7,018), பொக்கோக் செனா (5,731), கூலிம் பண்டார் பாரு (5,583), பெண்டாங் (4,073), மெர்போக் (3,098), ஜெராய் (2,299).

சிக் (481), பாடாங் தெராப் (369) ஆகிய இரண்டு இடங்களில்  குறுகிய வெற்றியே கிடைத்தது.

1kedah 1azizanமறுபுறம், பிஎன் குபாங் பாசு (7,060 வாக்கு பெரும்பான்மை), லங்காவி (4,970), ஜெர்லுன் (2,205) ஆகிய இடங்களில் நல்ல வெற்றியைப் பெற்றது. ஆனால், அலோர் ஸ்டாரில் 184-வாக்குகளில் அதன் தலை தப்பியது.

வரும் தேர்தலில் பாடாங் தெராப், சிக் (இரண்டும் பக்காத்தான் கைகளில்), அலோர் ஸ்டார் (பிஎன்) ஆகிய இடங்களில் பக்காத்தானுக்கும் பிஎன்னுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக்குக்கும் (வலம்)  மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் மாநில பாஸ் துணை ஆணையருமான பஹ்ரோல்ரஸி ஜவாவிக்குமிடையிலான சச்சரவு ஜெராயிலும் கோலா கெடாவிலும் பக்காத்தானைப் பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பாஸை  அலைக்கழிக்கும் வெட்டுமரக் குத்தகைகளும்  உள்சண்டைகளும்

1kedah kuala nerang2008 பொதுத் தேர்தலில், பாடாங் தெராப்பில் பாஸ் வேட்பாளர் முகம்மட் நசிர் ஜக்கரியா பிஎன் வேட்பாளரான படுகா கசாலியை தோற்கடித்தார். ஆனால், அத்தொகுதில் உள்ள இரண்டு சட்டமன்ற இடங்களான கோலா நெராங்-கையும் பெடு-வையும் பிஎன் கைப்பற்றியது.

கோலா நெராங்கில் பிஎன்னின் சைட் சோப்ரி சைட் ஹஷிமுக்குக் கிடைத்தது ஒரு குறுகிய வெற்றிதான். ஆனால், முன்னாள் மந்திரி புசாரான மஹாட்சிர் காலிட் பெடுவில் 2,733 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.

நசிர், பெடாங்கில் காடு ஒழிப்புத் திட்டமொன்றில் ஈடுபட்டதன் தொடர்பில் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். மக்கள் பண்ணை ஒன்றை அமைப்பதற்காகத்தான் அந்தக் காடு அழிக்கப்பட்டது என்று காரணம் கூறப்பட்டாலும் மக்களிடையே அது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாஸுக்கு இப்படி ஒரு பிரச்னை என்றால் பிஎன் சோப்ரிக்கு வேறு வகையான பிரச்னை. அவர் நிதிச் சிக்கலையும் நொடித்துப்போகும் நிலையையும் எதிர்நோக்கியுள்ளார்.

ஜெராயில் பாஸ் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெராய் எம்பி பிர்டாஸ் ஜாப்பார் ஒரு வலுவான வேட்பாளர்தான். ஆனால், அவருக்கும் மந்திரி புசாருக்குமிடையிலான தகராற்றின் காரணமாக ஜெராயில் அவருக்கு ஆதரவு குறையலாம் என்பது பார்வையாளர்களின் கருத்தாகும்.  12வது பொதுத் தேர்தலில் அவருக்குப் பெரும்பகுதி வாக்குகள் அத்தொகுதிக்குள் இடம்பெற்றுள்ள அசிசானின் சுங்கை லிமாவ் சட்டமன்றத் தொகுதியிலிருந்துதான் வந்தன.

இதே தகராற்றால் மந்திரி புசாருக்கு தம் சொந்த இடத்தில் உள்ள ஆதரவும்கூட குறைந்து போகலாம் எனக் கருதப்படுகிறது.

பாஸுக்கு ஆறுதளிக்கும் விசயம் என்று பார்த்தால், ஜெராயின் இரண்டு சட்டமன்ற இடங்களிலும் பிஎன்னுக்கான ஆதரவு சரிந்து வருகிறது. குருனில் 2004-இல் மசீச-வின் லியோங் யோங் கொங் பெற்ற 7,071 பெரும்பான்மை 2008-இல் 1,554 ஆகக் குறைந்தது.

அதேபோல், குவார் செம்ப்டாக் மாநிலச் சட்டமன்றத் தொகுதியில் பிஎன்னின் கூ அப்ட் ரஹ்மான் கூ இஸ்மாயிலுக்கு 2004-இல் கிடைத்த 3,966 பெரும்பான்மை 2008-இல் 1,759 ஆகக் குறைந்தது.

பிஎன்னின் ஆட்டம்கண்டுள்ள இடங்கள்

1kedah alor starஅலோர் ஸ்டாரையும் ஜெர்லுனையும்  பிஎன் தக்கவைத்துக்கொள்ளுமா என்பது கேள்விக்குரியதே. அவ்விரண்டு தொகுதிகளிலும் குறுகிய வாக்குகளில்தான் பிஎன் வெற்றி பெற்றது.

குறிப்பாக, வீடமைப்பு அமைச்சர் சோர் சீ ஹுவாங்கின் அலோர் ஸ்டார் தொகுதியில் அபாய விளக்கு எரிகிறது. 2004-இல் 15.515 வாக்குகள் பெரும்பான்மையாகக் கிடைத்த அந்த இடத்தில் 2008-இல் வெறும் 184 வாக்குகள் வேறுபாட்டில்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. அவருடைய பெரும்பான்மை 99 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

நகர்புறத்தில் உள்ள அத்தொகுதி மக்கள் விவரமறிந்தவர்கள், அத்துடன் அங்குள்ள சீனர்கள் பெரும்பாலும் பக்காத்தானை ஆதரிப்பதாகவும் தெரிகிறது.

அலோர் ஸ்டாரில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். கடந்த நான்காண்டுகளில் 1,644 பேர்தான் புதிய வாக்காளர்களாக பதிந்து கொண்டிருக்கிறார்கள். இவற்றைப் பார்க்கையில் அங்கு பக்காத்தானுக்கே வெற்றி பெறும் வாய்ப்பு என்று தெரிகிறது.

ஜெர்லுனிலும் பிஎன் சிறு பெரும்பான்மையில்தான் வென்றது. அதனுள் அடங்கிய கோட்டா சிபூத்தே-இன் சட்டமன்ற உறுப்பினர் நீதிமன்ற வழக்கு ஒன்றிலும் சிக்கிக்கொண்டிருந்தார். சட்டமன்ற அமர்வுகளுக்குத் தொடர்ந்து செல்லாத காரந்த்தால் அவருடைய இடம் காலியானதாக சட்டமன்றம் அறிவித்தது.

பெண்டாங், பாஸின் கோட்டை. அங்கு பாஸ்தான் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. அதிலும் 12வது பொதுத் தேர்தலில் அதன் பெரும்பான்மை மேலும் கூடி இருந்தது.

1kedah mat sauஇப்போது பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு (வலம்) அங்கு களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த இடத்தில் பாஸை அசைக்க முடியாது. பெண்டாங்கின் நடப்பு எம்பி, சுங்கை தியாங்கில் சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

பெங்காலான் குண்டோரில் பிஎன் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. அதன் நடப்பு வேட்பாளர் பஹ்ரோல்ரஸி, ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதியில் முக்ரிஸ் மகாதிருக்கு எதிராக நிறுத்தப்படுவார் போல் தெரிகிறது.

TAGS: