பிகேஆர், அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை விளக்க மலேசிய வானொலி-தொலைக்காட்சி (ஆர்டிஎம்) கொடுக்க முன்வந்த 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தது.
நேற்று டிஏபி ஆர்டிஎம் ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தைத் தொடர்ந்து இன்று பிகேஆரும் அவ்வாறே செய்தது. ஒலிபரப்பு நேரம் கொடுக்க முன்வந்தது ஒரு “அரைவேக்காட்டு அரசியல் தந்திரம்” என்பதால் அதை நிராகரிப்பதாக பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குனர் நிக் நஸ்மி நிக் மாட் (இடம்) கூறினார்.
“10-நிமிட ஒலிபரப்பு நேரம் என்பதே மக்களின் அறிவாற்றலை இழிவு படுத்துவதாகும்”, என பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
“அதன் மூலமாக ஊடகங்களில் நியாயமான நேரம் கொடுக்கப்படுகிறது என்பதைக் காட்டிக்கொள்ள நினைக்கிறார் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம். ஆனால், அது உண்மைஅல்ல”, என்றாரவர்.
“உண்மையான ஜனநாயகத்தில் ஊடகங்கள் செய்திகளை அறிவிப்பதில் நியாயமாக நடந்துகொள்ளும். ஊடகமென்பது மக்கள்மீது அம்னோவின் கருத்துகளைத் திணிக்கும் பிரச்சார இயந்திரமல்ல”, என்றவர் சொன்னார்.
பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன், ஆளும் கூட்டணி ஆண்டு முழுவதும் அரசுக்குச் சொந்தமான வானொலி-தொலைக்காட்சியை ஆண்டு அனுபவிக்கும் வேளையில் பிகேஆருக்கு அதன் தேர்தல் கொள்கையை விளக்க 10-நிமிடம் மட்டுமே ஒதுக்கப்படுவதைச் சாடினார்.
நேற்று, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் அரசாங்கம் கொடுக்க முன்வந்த 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை டிஏபி புறந்தள்ளுவதாக அறிவித்தார்.