இந்தியர்களுக்கான டிஏபியின் 14-அம்சத் திட்டம்

1dapடிஏபி இந்தியர்களின் சமுதாய-பொருளாதார நிலையை உயர்த்த 14-அம்சத் திட்டமொன்றைக் கொண்டு வந்துள்ளது. ‘கேலாங் பாத்தா’ பிரகடனம் என்று அழைக்கப்படும் இத்திட்டம் நேற்று ஜோகூர் பாருவில் அறிவிக்கப்பட்டது.

டிஏபி கொண்டுவந்துள்ள  இத்திட்டம், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால், நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது போன்ற தீர்மானங்களை உள்ளடக்கி இருப்பதுடன் புதிதாக சில அம்சங்களையும் கொண்டிருக்கிறது. அவையாவன:

1. பக்காத்தான் ஆட்சியேற்ற 100 நாள்களுக்குள் நாடற்றவர்களாகவுள்ள இந்தியர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண்பது;

2. தேசிய வீடமைப்பு வாரியம் ஒன்று அமைத்து ஒதுக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாக தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட 1dap1இந்தியர்களுக்கு கட்டுப்படியான விலையில் போதுமான வசதிகளைக் கொண்ட வீடுகளைக் கட்டிக்கொடுத்தல்;

3. எல்லா தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளும் முழு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றப்படுவதுடன் ஒவ்வொரு பள்ளியும் ‘தேசியப் பள்ளிகளுக்கு’ இணையான வசதிகளைப் பெற்றிருப்பதும் உறுதி செய்யப்படும்;

4. படிப்பைப் பாதியிலே கைவிடும் குறைந்த வருமானம் பெறும் இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மாற்றுக்கல்வி வழங்கவும்  பணி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் தொழில்பயிற்சிக்கும் தொழில்நுட்பப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

5.வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதுடன் குறைந்த வருமானம் பெறும் இந்தியர்களின் ஊதியத்தைக் குறைந்தபட்சம் ரிம 1,100ஆகக் கூட்டுதல்;

6. ஜிஎல்சி (அரசுசார்புள்ள நிறுவனங்கள்), ஊராட்சி மன்றங்கள், பொதுச் சேவைத்துறை ஆகியவற்றில் இந்தியர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல்:

7. இந்து ஆலயங்களுக்கும் மயானத்துக்கும் நிலம் ஒதுக்குதல்; இப்போதுள்ள இடங்களிலிருந்து அவற்றை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அவற்றுக்கு மாற்று இடத்தைப் பெற்றுத்தரல்;

8. இந்திய சிறு வணிகர்களுக்கு சிறுகடன் வசதிகளும் மற்ற நிதி உதவிகளும் வழங்குதல், அதிலும் குறிப்பாக, மகளிருக்கும் இளைஞருக்கும் வீட்டிலிருந்து செய்யும் தொழில்களுக்கும் முக்கிய கவனம் செலுத்துதல்;   9.தனி போலீஸ் புகார் மற்றும் ஒழுக்கக்கேடுகள் விசாரணை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைத்தல்; போலீஸ் காவலில் நேரும் மரணங்களுக்கு முடிவு கட்டுதல்;

10, இந்தியர்கள் பங்குரிமை பெறுவதை ஊக்குவிக்க தனி நிதி ஒன்றை அமைத்தல்;

11. நகர்புறங்களில் இந்திய சமூகம் எதிர்நோக்கும் ஏழ்மையையும் மற்ற சமுதாய பிரச்னைகளையும் கவனிக்க ஓர் அணையம் அமைத்தல்;

12. தனித்து வாழும் தாய்மார்களுக்கு வீடு வாங்குவது உள்பட, பொருளாதார ரீதியில் உதவும் கொள்கைகளை உருவாக்குதல்;

13.தோட்டப்புறங்களையும் நகர்புற ஏழைக் குடும்பங்களையும் சேர்ந்த திறமைமிக்க இந்திய மாணவர்களுக்கு தங்குவசதிப் பள்ளிகளை உருவாக்குதல் அல்லது ஏற்கனவேயுள்ள தங்குவசதி கொண்ட பள்ளிகளில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளுதல்;

14. மக்கள்-எதிர்ப்புச் சட்டங்களையும் பாரபட்சத்தையும் ஒழித்தல்.

இந்த 14-அம்சத் திட்டம், கேலாங் பாத்தாவில் ஒரு தங்குவிடுதியில் நடைபெற்ற டிஏபி கூட்டமொன்றில் அறிவிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங்கும் ஈப்போ பாராட் எம்பி, எம். குலசேகரன் தலைமையில் டிஏபியின் மூத்த இந்திய தலைவர்களும் கலந்துகொண்டனர்.

1dap2டிஏபி எம்பிகளான சார்ல்ஸ் சந்தியாகு, எம் மனோகரன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சிவநேசன் முதலியோரும் அங்கிருந்தனர்.

14-அம்சத் திட்டம் இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டது எனக் குலசேகரன் கூறினார்.

“கடந்த நான்காண்டுகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமையில் பிஎன், இந்தியர் வாக்குகளைக் கவரும் நோக்கில் சில திட்டங்களை அறிவித்தது.. அவை அப்போதைக்கு மட்டுமே பயன்படக்கூடிய திட்டங்களாக இருந்தனவே தவிர, அவற்றுக்கு சமூகத்தில் புரையோடிக் கிடந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கமில்லை”, என்று டிஏபி உதவித் தலைவர் குறிப்பிட்டார்.

“இந்தியர் பிரச்னைகளுக்குத் தற்காலிகக் கட்டுப்போடுவது போதாது. அவற்றுக்கு ஆழமான, நிரந்தரத் தீர்வுகள் தேவை.

“எங்கள் 14-அம்சத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தியர்களின் ஏழ்மை நிலை வேரோடு பிடுங்கி எறியப்படும்”, எனக் குலசேகரன் கூறினார்.

TAGS: