பினாங்கு சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது

1 penangஎதிர்பார்க்கப்பட்டதுபோல் பினாங்கு சட்டமன்றம் இன்று கலைக்கப் படவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்ததைத் தொடர்ந்து அதுவும் கலைக்கப்படும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

அச்செய்திக்காக, நண்பகல் 12 மணிக்கே செய்தியாளர்கள் பெருங் கூட்டமாக கொம்டாரில் 28-வது மாடியில் உள்ள முதலமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்தில் கூடிவிட்டனர்.

“நஜிப்பிடமிருந்து தொலைநகலி ஒன்று வந்தது. பேரரசரைச் சந்தித்ததாகவும் அவர் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைக்க அனுமதி கொடுத்து விட்டதாகவும் அதில் கூறியிருந்தார்” என்று லிம், மாநில ஆட்சிக்குழுவின் கடைசிக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறினார்.

“என்னையும் அதே நேரத்தில் சட்டமன்றத்தைக் கலைத்து ஒத்துழைக்குமாறு கேட்டிருந்தார். சட்டமன்றத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவதில் ஆட்சிக் குழுவுக்குப் பிரச்னை எதுவுமில்லை.

“எனவே, நாளைக் காலை மணி 9.30க்கு ஆளுநரைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்க அனுமதி கேட்பேன்”, என்றாரவர்.

‘வாக்களிப்பதற்குமுன் எல்லாவற்றையும் அலசி ஆராயுங்கள்’

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பில் உடனே எதிர்வினையாற்றிய மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ, பல மாதங்களாக நடைபெற்று வரும் தேர்தல் ஆயத்தப் பணிகள் அடுத்த சில வாரங்களில் மேலும் தீவிரமடையும் என்றார்.

“மலேசியர்கள் வாக்களிப்பதற்குமுன் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பல்வேறு கூறுகளையும் அலசி ஆராய வேண்டும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“13வது பொதுத் தேர்தல் மலேசிய அரசியலில் ஜனநாயகம் முதிர்ச்சி பெற்று விளங்குவதைக் காண்பிக்கிறது.

“மலேசியர்கள் மாசற்ற, ஆரோக்கியமான  தேர்தல் பரப்புரைகளில்  ஈடுபட வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், “அவர் (நஜிப்) பதவிக்கு வந்து இன்றுடன் நான்காண்டுகள் ஆகின்றன. அதனால்தான் இன்று (நாடாளுமன்றம் கலைவதை) அறிவித்தார்” என்றார்.

“அவர்  நேசமிக்க இந்நாட்டுக்காக பல்வேறு உருமாற்றுத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அவை எல்லாம் நல்ல பலனைத் தந்துள்ளன”, என்றாரவர்.

TAGS: