பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் நடப்பு அரசாங்கம் பராமரிப்பு அரசாங்கமாகி விடும். தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் அமையும் வரை அது சேவை செய்யும்.
இடைக்காலத்தில் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் பிரதரிடமும் அவரது அமைச்சரவையிடமும் இருக்கும். அவர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.
பராமரிப்பு அரசாங்கம் என்பது உண்மையில் நடப்பு அரசாங்கம் என்றும் அமைச்சர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புக்களையும் வழக்கம் போல நிறைவேற்றுவர் என்றும் மக்களவைத் துணை சபாநாயகர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் கூறினார்.
பிரிட்டிஷ் நிர்வாக முறையிலிருந்து எடுக்கப்பட்ட அந்த நடைமுறை நாடு சுதந்திரம் பெற்றது முதல் பின்பற்றப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.
‘நடப்பு அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும்’
“அமைச்சரவை தொடர்ந்து நாட்டை நிர்வாகம் செய்து வரும். பொருளாதார, அரசியல் அம்சங்களை பொறுத்த வரையில் நாட்டு நிர்வாகத்தில் எந்தத் தாக்கமும் இருக்காது.”
“எல்லா அமைச்சர்களும் தங்கள் கடமைகளை வழக்கம் போலச் செய்து வருவர்,” என வான் ஜுனாய்டி நிருபர்களிடம் சொன்னார்.
என்றாலும் பராமரிப்பு அரசாங்கத்தின் அதிகாரங்கள் வரம்புக்கு உட்பட்டவை எனக் கூறிய அவர், மக்களவை கலைக்கப்பட்டுள்ளதால் கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் அன்றாடப் பணிகளை மட்டுமே மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தேசிய நிர்வாகப் பணிகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் நாடாளுமன்றம் இயங்காததால் சட்டங்கள் ஏதும் இயற்றப்பட மாட்டாது.”
கொள்கைகளை அமலாக்கும் தலைமை அதிகாரி என்ற முறையில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் கூடுதல் அதிகாரம் ஏதுமின்றி நாட்டின் மிக உயர்ந்த அரசாங்க அதிகாரியாக தொடர்ந்து பணியாற்றுவர் என்றும் வான் ஜுனாய்டி சொன்னார். ஏனெனில் நாடாளுமன்ற ஜனநாயகம் அவருக்கு நிர்வாக அதிகாரங்களை மட்டுமே வழங்கியுள்ளது.
‘பராமரிப்பு அரசாங்கம்’ என்னும் சொல் கூட்டரசு அரசமைப்பில் எழுதப்படவில்லை என்றாலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றும் பல நாடுகளில் அது தான் நடைமுறை என்றார் அவர்.
-பெர்னாமா