-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். ஏப்ரல் 3, 2013.
நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படுகிறது என்று பிரதமர் நஜிப் துன் ராசாக் விடுத்த அறிவிப்பை வரவேற்கிறோம். நீண்ட நாட்களாக ஒரு முடிவை எடுக்க முடியாமல் தேர்தல் காலத்தைத் தள்ளிப் போட்டு மக்களுக்குப் பல சிரமங்களை அளித்து விட்டார்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள். எந்த அரசாங்கம் வந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தவணை காலத்தில் அவர்களின் சேவையைச் செம்மையாக முடித்துக் கொண்டு முறையான தேர்தலுக்கு வழி விட்டு மக்களின் தீர்ப்புக்குக் காத்திருக்க வேண்டும்.
அந்த வகையில் உங்கள் மாநில சிலாங்கூர் அரசும் அதற்குத் தயாராக இருக்கிறது. இம்மாநிலம் இந்நாட்டிற்கே வழிகாட்டும் நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல் படுத்தி வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். மாநிலத்தின் வளம் மக்களுக்கே என்ற கோட்பாடுகளின் வழி, பட்ஜெட்டில் வராத பல்வேறு திட்டங்களுக்குச் சுமார் 100 கோடி ரிங்கிட்டை இம்மாநில அரசு மக்களுக்காகச் செலவிட்டுள்ளது.
இந்த நாட்டில் தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் பல இடங்களில் ஆவி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பதும், வாக்குப் பட்டியலிருந்து வாக்காளர்கள் பெயர் சம்பந்தமில்லாமல் மற்றத் தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதும் தகாத காரியம். தேர்தல் வாரியம் நீண்ட காலத்திற்கு முன்பே பல புகார்களைப் பெற்றும் இன்னும் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது கண்டிக்கத் தக்கது.
இது மக்களிடம் வீண் சந்தேகங்கள் ஏற்பட காரணமாகி விட்டது. பெர்சே அமைப்பின் மூலம் மக்கள் நடத்திய பல போராட்டங்களை மதிக்காதது வருத்தத்துக்குரியது. இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் அவரவர் பெயர்களை உடனடியாக வாக்கு பட்டியலில் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே வேளையில், அன்னியர்கள் உங்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்துவதையோ அல்லது எவரும் அடையாள அட்டைக்குப் பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினால் அவர்களிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களைப் பற்றி போலீஸ் புகார் செய்ய வேண்டும்.
இந்திய சமூகத்தைப் பொறுத்த வரை இது மிகவும் முக்கியமான ஒரு தேர்தல். கடந்த தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த இந்தியர்கள் அவர்களின் பங்களிப்பைச் செய்திருந்தனர். அதனால் முன் எப்போதும் கிட்டாத பல அனுகூலங்களை நமது சமூகம் பெற்றது. இந்தியர்களில் பெரும்பகுதியினர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை நம்மவர்களை அதிகம் பாதிக்கும்.
பக்காத்தான் மாநில அரசும், தேசிய அளவிலான கட்சிகளும் நாட்டில் ஊழலற்ற நேர்மையான, தூய்மையான, சமத்துவமான கொள்கைக்குப் போராடி வருகின்றன. இம்முறை நாம் தேசிய அளவில் ஏற்படுத்தும் மாற்றம் நம்மவர்களின் வாழ்வில் புதுப் பொலிவை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். இந்திய சமூகத்தில் ஏழ்மை ஒழிப்புக்குக் கல்வி வளர்ச்சி முக்கியம் என்பதால், பக்காத்தானின் இலவச உயர்கல்வித் திட்டமும், தொழிலாளர்களுக்கான ரிங்கிட்1100 அடிப்படைச் சம்பளமும், அன்னியத் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைப்பும் நமது மக்களுக்கு நிறைய பயனளிக்கும்.
அத்துடன் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள், அதிக வேலை வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள், சமூக நல உதவிகள், தோட்டப் பாட்டாளிகளுக்கான வீடமைப்புகள், அடையாள அட்டை மற்றும் பிரஜா உரிமை போன்ற பல திட்டங்கள் நமது வாழ்விற்கு வளம் சேர்க்கும் என்பதால் இந்திய மக்கள் இத்தேர்தலில் பக்காத்தான் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.