‘ஒப்புக்காக சில மைகார்டுகளைக் கொடுத்தது, ஒரு மலிவான தந்திரம்’

1icபராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நேற்று நாடற்ற இந்தியர்களுக்காக 120 மைகார்டுகளை வழங்கிய நிகழ்வு ஒரு “மலிவான தந்திரம்” என்பதுடன் இந்திய சமூகத்தை மட்டம் தட்டும் ஒரு செயலுமாகும் என பிகேஆர் சாடியுள்ளது.

“இது, நாடற்ற மக்களின் பிரச்னைக்கு பிஎன் தீர்வுகண்டு வருகிறது என்று இந்திய சமூகத்தை நம்ப வைக்கும் ஒரு நேர்மையற்ற முயற்சியாகும்.

“120 பேருக்கு ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள். நாடு முழுக்க இன்னும் கிட்டதட்ட 300,000 இந்தியர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்களே அவர்களின் நிலை என்ன?.

“அதனினும் மோசமாக சுமார் 49,000 இந்திய சிறார்கள் பிறப்புச் சான்றிதழ்களோ மைகார்டுகளோ இன்றி இருக்கின்றார்கள்”, என்று பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

1ic1நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து நஜிப் அந்த மைகார்டுகளை வழங்கியது “மலிவான தேர்தல் தந்திரம் என்பது தெளிவு” என்றும் நாடற்றவர் புரச்னையைத் தீர்ப்பதில் பிஎன் தலைவருக்கு உண்மையான அக்கறை இல்லை என்றும் சுரேந்திரன் கூறினார்.

இதனிடையே தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி), மிகப் பெரிய எண்ணிக்கையினர் நாடற்றவர்களாக உள்ளனர் என்று கூறப்படுவதை மறுக்கிறது.

நேற்றைய நிகழ்வுக்குப் பின்னர் டிவிட்டரில் பதிவு செய்திருந்த அது, “300,000 பேர் நாடற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. அப்படிப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததும் அந்த எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டினர்- 300பேர் மட்டுமே வந்தனர்.

“இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்”, என்றது கேட்டுக்கொண்டது.

‘பிஎன் கொள்கைகளால் வந்த விளைவு’

1ic2இப்பிரச்னை இந்தியர்களுக்கு மட்டுமே உரியதன்று என்ற சுரேந்திரன், சாபா என்ஆர்டி இயக்குனர் ஜபீர் ஹென்ரியின் கூற்றுப்படி அம்மாநிலத்தின் உள்பகுதியில் சுமார் 50,000பேர் நாடற்ற மக்களாக உள்ளனர் என்றார்.

அரசாங்கம் “முறைப்படியும் விரிவாகவும் இப்பிரச்னையை அணுக வேண்டும்”, என்றவர் குறிப்பிட்டார்.

“அவ்வப்போது ,அரசியல் நோக்கத்துக்காக ஏப்ரல் 4-இல், செந்தூல் பண்டார் பாருவில் அரங்கேற்றியதைப்போன்ற நிகழ்வுகளை நடத்துவதன்வழி பரவலாக  நிலவும் நாடற்றவர் பிரச்னைக்குத் தீர்வு கண்டு விட முடியாது”.

ஆளும்கட்சியின் வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கைகள்தான் இதற்கு அடிப்படை காரணம் என்றும் அக்கொள்கைகள் என்ஆர்டி-இல் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும் அவர் சொன்னார்.

“நாடற்ற மலேசியர்களின் துயரங்களுக்குப் பாகுபாடு காட்டும் நடைமுறைகளும் அளவுமீறிய நிர்வாகக் கட்டுப்பாடுகளும் அரசமைப்பு விதிகள் புறக்கணிக்கப்படுவதும் உள்துறை அமைச்சின் பராமுகப் போக்கும்தான் முக்கிய காரணங்களாகும்.

“நாடற்ற மலேசியர்களின் துயரங்கள் முடிவில்லாமல் தொடர்வதற்கு  சுதந்திரத்துக்குப் பின்னர் தொடர்ந்து நாட்டை ஆண்டு வந்துள்ள ஒரே ஆளும் கட்சி என்ற முறையில்  பிஎன்தான் முழுப் பொறுப்பு”.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் இப்பிரச்னைக்கு 100 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் என சுரேந்திரன் குறிப்பிட்டார். அதே வேளை, பிஎன் ஆட்சி தொடர்ந்தால் நாடற்றவர்களின் “எதிர்காலம் இருண்டுபோகும்” என்றவர் எச்சரிக்கை விடுத்தார்.

TAGS: