கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானை பிஎன் நிறுத்தக் கூடும் என்ற செய்திகள் வெளியான போதும் தாம் அங்கிருந்து ஒடப் போவதில்லை என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார்.
“கனி கேலாங் பாத்தாவில் போட்டியிட விரும்பினால் நான் பின் வாங்க மாட்டேன் !”
“நான் தோல்வி அடைவதைப் பற்றியும் கவலைப்படவில்லை ! மரணத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை !” என்றார் லிம்.
லிம், பத்து பஹாட்டில் செராமா நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவ்வாறு கூறினார். பத்து பஹாட் அவர்
பிறந்த ஊர் ஆகும். அங்கு அவர் தமது தொடக்கக் கல்வியைப் பெற்றார்.
அவரது அறிவிப்பை கூட்டத்தினர் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
2008 தேர்தலில் ஏற்பட்ட ‘அரசியல் சுனாமியை’ ஜோகூர் மாநிலத்துக்கும் விரிவு செய்து கூட்டரசு அதிகாரத்தை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுவதற்றுவதற்கு உதவியாக தாம் கேலாங் பாத்தாவில் போட்டியிட முடிவு செய்ததாக லிம் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
அவர் இப்போது ஈப்போ தீமோர் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதிக்கிறார்.
ஜோகூரின் தென் பகுதியில் கிட் சியாங்-கிற்கு ஆதரவு பெருகுவதைக் கட்டுப்படுத்த கனி-யை கேலாங்
பாத்தாவில் நிறுத்துவது பற்றி பிஎன் சிந்திப்பதாக பல நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் அந்தத் தகவல்கள் குறித்து கருத்துரைக்க கனி மறுத்து விட்டார்.