தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தாலாட்டு பாடினார் முஹிடின் யாசின்!

muhyiddin yassinமலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களைத்  துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹிடின் யாசின் இன்று சந்தித்தார். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில், பராமரிப்பு அரசாங்கத்தின் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்விற்குச் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

தனதுரையில் சந்திப்பின் நோக்கத்தை விளக்கிய முஹிடின், நாட்டின் கல்வி அமைப்புமுறையின் கீழ் தகுந்த திட்டங்கள் வழி கல்வியை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார். பல்லின மக்களின் தாய்மொழிக்கல்வி கட்டி காக்கப்படும் என்றார். தற்போது இருக்கும்  523 தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றைக்கூட புதைக்க விட மாட்டோம் என்றார்.

சுமார் 40 நிமிடங்கள் பேசிய அவர், இடையே இரு முறை சபையில் இருந்தவர்களைப் பார்த்து “இப்போது இதற்கு நீங்கள் கைத் தட்டலாம்” என்றார். கூடியிருந்த ஆசிரியர்களும் கைத் தட்டினார்கள். அப்போது பிரதான மேடையில் இருந்த இருவர் கண்கள் மூடியநிலையில் தலையாட்டிக் கொண்டிருந்தனர்.

சிறப்பான மேடையும், பல்லூடக அமைப்பும் நிகழ்விற்கு மெருகு சேர்த்தன. போதுமான மின்விசிறிகள் சுழன்று கொண்டிருந்தன. பிற்பகல் சூட்டில் வந்து சேர்ந்த ஆசிரியர் பெருமக்களின் சிலருக்கு முஹிடினின் உரை தாலாட்டாக ஒலித்திருக்க வேண்டும்; அவர்கள் கண்களை மூடியும் திறந்தும் ரசித்துக்கொண்டிருந்தனர்.

sleep bnமுஹிடின் தனக்கு முன் பேசிய மஇகா தலைவர் பழனிவேலிடம் தமிழில் உரையாற்ற தாம் கேட்டுக்கொண்டதாவும் ஆனால் அவர் தமிழ் பேசத் தயங்கியதைச் சுட்டிக்காட்டி வருத்தப்பட்டுக் கொண்டார்.

சொல்ல வந்ததைச்  சொல்ல ஆரம்பித்தபோதுதான், இந்த கூட்டத்தின் நோக்கம் இப்போதாவது புரிந்ததே என்ற ஏக்கம் தீர்ந்தது போல் பலர் நிமிர்ந்து அமர்ந்தனர்.

பாரிசான் நேசனல் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு மாணவருக்கும் மடிக்கணினி  வழங்கப்படும் என்றார். அது தேசிய முன்னணியின் உறுதி என்றார். ஆனால், அதன் செயலாக்கம் இன்னமும் ஆய்வில் இருப்பதாக கூறினார். அனைவரும் கரவொலி எழுப்பினார்கள். முஹிடின் முகம் மலர்ந்தது.

மிகக்கவனமாக கடந்த 56 ஆண்டுகால ஆட்சியில் இன்னமும் 368 தமிழ்ப்பள்ளிகள்   பகுதி உதவி பெரும் பள்ளிகளாகவும், 155 பள்ளிகள் முழு உதவி பெரும் பள்ளிகளாக இருப்பதாகவும் கூறிய முஹிடின்,  நஜிப் சொல்லிக்கொண்டிருக்கும் 7 புதிய  தமிழ்ப்பள்ளிகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.

நமது நாட்டின் சாதனைகளுக்காக நாம் பெருமைப்படவேண்டும் என்றார். 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அனைத்துலக கணிதம், அறிவியல் கல்வி மீதான போக்குகளில் (TIMSS)  சராசரி நிலைக்குக்  கீழே மலேசியா இருந்ததையும், 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அனைத்துலக மாணவர் மதிப்பீட்டில் (PISA) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 74 நாடுகளில் கடைசி மூன்றாவது நாடாக மலேசியா இருந்ததையும் குறிப்பிட்டார். ஆனால், இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லாததால் பலர் கைத்தட்டவில்லை.

இறுதியாக அனைத்து ஆசிரியர்களும் தேசிய முன்னணிக்கு வாக்களித்தால் தாம் பெருமைப்படுவதாக கூறி தனது உரையை முடித்தபோது அனைவரும் பெரு மூச்சுடன் “அப்பாடா” என்று கரவொலி எழுப்பினர்.

பாவம் முஹிடின், கரவொலிக்கான காரணம்  புரியாமல் புன்னகையுடன் அமர்ந்தார்.

TAGS: