இதுவரை தொகுதி எதுவும் இல்லாதிருந்த ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், செகாமாட்டில் களமிறக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிகேஆரும் டிஏபியும் பல வாரங்கள் கூடிப் பேசிய பிறகு இம்முடிவைச் செய்துள்ளன.
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜோகூரின் வட பகுதியிலும் மலாக்காவிலும் போட்டியிடும் கட்சி வேட்பாளர் பட்டியலொன்றை வெளியிட்டிருப்பதாக பக்காத்தான்-ஆதரவு இலக்கவியல் தொலைக்காட்சி அலைவரிசையான மீடியா ரக்யாட் தெரிவித்தது. அன்வார் நேற்றிரவு அவ்விரு மாநிலங்ககளுக்கும் செராமாக்களில் கலந்துகொள்ளச் சென்றபோது அப்பட்டியலை வெளியிட்டார்.
சுவா ஒரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, ஜோகூரில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் பிகேஆருக்கும் டிஏபி-க்குமிடையில் ஒரு மாதமாக நிலவி வந்த சர்ச்சைக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் மசீச அமைச்சரான சுவா, 2009-இல் பிகேஆரில் சேர்ந்தார். அவருக்கு கேலாங் பாத்தாவில் போட்டியிடும் விருப்பம் இருந்தது. ஆனால், அத்தொகுதி வேட்பாளராக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நிறுத்தப்படுவார் என்று மார்ச் 18-இல் அறிவிக்கப்பட்டதும் ஏமாற்றமடைந்த சுவா அதன்பின்னர் பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.
ஏப்ரல் 5-இல் மெளனம் கலைந்து மறுபடியும் பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.
சுவா (வலம்) செகாமாட்டில் மஇகா உதவித் தலைவரும் பராமரிப்பு அரசின் மனிதவள அமைச்சருமான டாக்டர் எஸ். சுப்ரமணியத்தை எதிர்த்துப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் சுப்ரமணியம் 2,991 வாக்குகள் பெரும்பான்மையில் டிஏபி-இன் பாங் ஹொக் லியோங்கைத் தோற்கடித்து செகாமாட்டைத் தக்க வைத்துக்கொண்டார். செகாமாட், சீனர்கள் (46விழுக்காடு), மலாய்க்காரர்கள் (44 விழுக்காடு), இந்தியர்கள்(10 விழுக்காடு எனப் பல இனங்களும் கலந்துவாழும் ஒரு தொகுதி.
மலாய்க்காரர்களைவிட மலாய்க்காரர்-அல்லாதார் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் அங்கு பக்காத்தான் வெல்லும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
அங்கு தனியார் சீன இடைநிலைப் பள்ளி ஒன்றுக்குப் புத்துயிர் அளிக்க அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதால் சீனர் சமூகம் ஆத்திரமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அன்வாரின் ஆசி கிடைத்துவிட்டது. அதனால், இனி சுவாவுக்கு எல்லாமே சுமூகமாக அமையும் என்றும் நினைப்பதற்கில்லை.
ஏனென்றால், செகாமாட்டின் நீண்ட கால அரசியல்வாதியான பாங், அங்கு சுவா களமிறக்கப்பட்டால் அவருக்கு எதிராக சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக மருட்டியுள்ளார். சுவாவை அங்குள்ள டிஏபி அடிநிலை உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை என்கிறார் அவர்.
மற்ற தொகுதிகளுக்கான பிகேஆர் வேட்பாளர்கள்
அன்வார், ஏழு நாடாளுமன்றத் தஒகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார்:
லெடாங்- ஜோகூர் பிகேஆர் உதவித் தலைவர் ஹசன் கரிம்;
ஸ்ரீ காடிங்- ஜோகூர் பிகேஆர் தேர்தல் குழுத் தலைவர் முகம்மட் குஸ்ஸான் அபு பக்கார்;
செகிஜாங்- பிகேஆர் இளைஞர் செயலாளர் ஜுலாய்லி ஜெமாடி;
செம்ப்ரோங்- புத்ரா ஜெயா பிகேஆர் தொகுதித் தலைவர் ஒன் அபு பக்கார்;
பாசிர் கூடாங்- ஜோகூர் பிகேஆர் துணைத் தலைவர் அஹ்மட் ஃபைடி சைடி;
புக்கிட் கட்டில் பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர்;
தாங்கா பத்து- தாங்கா பத்து பிகேஆர் தொகுதித் தலைவர் ரஹிம் அலி.
இந்தத் தொகுதிகள் எல்லாமே அம்னோ வசமுள்ளவை. செம்ப்ரோங்கின் நடப்பு எம்பி பராமரிப்பு அரசின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்.