பிகேஆர் சின்னத்தில் 2008ம் ஆண்டு பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் சுயேச்சை எம்பி-யாக மாறிய என் கோபால கிருஷ்ணன், வரும் தேர்தலில் பிஎன் அந்தத் தொகுதியில் தம்மை நிறுத்த வேண்டும் என விரும்புகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தாம் அந்தத் தொகுதியில் கடுமையாக உழைத்து வருவதாக பெர்க்கெமாஸ் என்ற அரசு சாரா அமைப்பின் தலைவருமான அவர் சொன்னார்.
“நான் பிகேஆர் கட்சியை விட்டு விலகிய பின்னர் லூனாஸ், பாயா புசார் பகுதி மக்களுடைய நன்மைக்காக பல திட்டங்களை தயாரித்துள்ளேன். ஒரு காலத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்களாக இருந்த பல வாக்காளர்கள் இப்போது பிஎன் -னை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்,” என கோபால கிருஷ்ணன் கூலிம், பாயா புசாரில் நிருபர்களிடம் கூறினார்.
பிகேஆர் சின்னத்தில் தாம் வெற்றி பெற்ற தொகுதியை தக்க வைத்துக் கொள்ள தாம் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்தார். அது முடியாது என்றால் தமது மனைவி எம் வசந்தி மாற்று வேட்பாளராக இருக்க முடியும் என்றார் அவர்.
“அந்தத் தொகுதி மக்களுக்கு நன்கு கடுமையாக உழைத்திருப்பதால் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்,” எனத் தெரிவித்த கோபால கிருஷ்ணன், அங்கு நிறுத்தப்படவிருக்கும் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரனைத் தாம் தோற்கடிக்க முடியும் எனச் சொன்னார்.
-பெர்னாமா