ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், அயல் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமான RZA இண்டர்நேசனல் கார்ப்பரேசனில் தமக்குள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை இணைய செய்தித் தளமான மலேசியாகினி திரித்துக் கூறிவிட்டதாகச் சாடியுள்ளார்.
கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சரான அவர், இன்று ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கை ஒன்றில் சரியான தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும் அவ்விணையத்தளம் தம் பெயரையும் தம் குடும்பத்தாரின் பெயரையும் கெடுக்கும் வகையில் உண்மைகளைத் திரித்துக் கூறிவிட்டது என்றார்.
“மலேசியாகினி, என் தந்தையை பணச் சலவை செய்பவர், வரி ஏய்ப்பவர், சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவர் என்று சித்திரித்திருப்பதன் மூலம் அவரது பெயரைக் கெடுத்திருக்கிறது. வரும் தேர்தலில் அவர்களின் வேட்பாளருக்குச் சாதகமான நிலையை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
“இது மலேசியாகினியின் நெறிமுறையற்ற போக்கையும் தீய நோக்கத்தையும் தெளிவாகவே காண்பிக்கிறது”, என்றவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்.
மலேசியாகினி, அயல்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களை வைத்துள்ள 1,500 பேரில் அரசியல்வாதிகள் என்று தலைப்பிட்ட செய்தியறிக்கையில், ராஜா நொங் சிக் தம் தந்தை ராஜா சைனல் அபிடின் ராஜா ஹாஜி தச்சிக்கையும் சகோதர, சகோதரிகளையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு RZA இண்டர்நேசனல் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார் என்று கூறியிருந்ததாம்.
ஏப்ரல் 2-இல் தாம் மலேசியானியுடன் பேசியதாகக் குறிப்பிட்ட ராஜா நொங் சிக், தாம் அமைச்சராவதற்கு முன்பே, தம் தந்தையார் RZA International Corporation-னை 2007, ஆகஸ்ட் 21-இலேயே நிறுவி விட்டார் என்பதை அதற்குத் அப்போதே தெளிவுபடுத்தி விட்டதாக சொன்னார்.
“2007 ஆகஸ்டில், நான் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழு அமைச்சராவதற்கு முன்பே, என் தந்தை RZA இண்டர்நேசனல் கார்ப்பரேசன் பங்குகளை என் தாயாருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் காலஞ்சென்ற சகோதரர் குடும்பத்துக்கும் எனக்கும் கொடுக்க முடிவு செய்தார்”, என்றாரவர்.
அயல்நாடுகளில் முதலீடு செய்யும் நோக்கம் கொண்ட அந்நிறுவனம், அப்படிப்பட்ட முதலீடு எதனையும் செய்ததில்லை என்று கூறியவர் 2008 டிசம்பரில் அது மூடப்பட்டது என்றார். அதைத் தவிர வேறு எந்த அயல் நிறுவனத்திலும் தாம் இயக்குனராக இருந்ததில்லை, பங்குரிமை வைத்திருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
-பெர்னாமா