அண்மையில் வெளியான செக்ஸ் வீடியோவுடன் பிகேஆர் உறுப்பினர்களை பல வலைப் பதிவாளர்கள் தொடர்புபடுத்தி எழுதியிருப்பது அபத்தமானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என பிகேஆர் இன்று வருணித்துள்ளது.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கிரிமினல் ஒருவர் (வலைப்பதிவாளர் பாப்பாகோமோ) அந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் சொன்னார்.
அத்தகைய வலைப்பதிவாளர்கள் சுமத்தும் அத்தகைய குற்றச்சாட்டுக்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
“பிகேஆர் கூட்டணியில் ஒன்றுபட்டுள்ளது. ஊழல் மலிந்த பிஎன் ஆட்சியைத் தோற்கடிக்க நாம்
ஒன்றுபட்டுள்ளோம்,” என்றார் அவர்.
மற்ற பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளுடனான பிகேஆர் உறவுகள் இணக்கமாகவும் சுமூகமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“உண்மையில் பிஎன் ஆட்சியை அகற்றும் பொதுவான நோக்கத்தில் நாங்கள் முன்னைக் காட்டிலும் ஒன்றுபட்டுள்ளோம்,” என்றும் சுரேந்திரன் சொன்னார்.
அத்தகைய போலி வீடியோக்களை வெளியிடுவதில் திறமை உடையவர்கள் யார் என்பது தங்களுக்குத் தெரியும் என பிகேஆர் உச்ச மன்ற உறுப்பினரான லத்தீப்பா கோயா கூறினார்.
இதனிடையே அந்த வீடியோவை பிகேஆர் -உடன் தொடர்புபடுத்துவது கொச்சையான தீய அரசியல் என பாஸ் கட்சியின் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் வருணித்துள்ளார்.
“அந்த வீடியோவை வெளியிட்டதற்கான நோக்கம் தெளிவானது. பிகேஆர் இளைஞர் பிரிவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைக்கும் முயற்சியே அதுவாகும். அவர்கள் அன்வார் இப்ராஹிமுக்கே களங்கம் விளைவிக்க முயலும் வேளையில் மற்ற தலைவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.”
“அந்த வீடியோவில் உள்ள மனிதர் பாஸ் தலைவர் என நாங்கள் நம்பவில்லை,” என்றார் அவர்.
திரங்கானு பெசுட்டில் அந்த வீடியோக்களை பல வீடுகளுக்கு பிகேஆர் இளைஞர்கள் விநியோகம் செய்ததாக பல வலைப்பதிவாளர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.
அந்த வீடியோவில் காணப்படுவதாக கூறப்படும் மாது-க்கு பிகேஆர் பணம் கொடுத்ததாகக் கூட அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ கூறிக் கொண்டுள்ளார்.