ஆர்ஓஎஸ்: டிஏபி சின்னத்தைப் பயன்படுத்தலாம், ஆட்சேபணை இல்லை

1rosசங்கப் பதிவதிகாரி அலுவலகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைமைத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், டிஏபி வேட்பாளர்கள் வரும் பொதுத் தேர்தலில் கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதில் அதற்கு ஆட்சேபணை இல்லை.

நேற்று பின்னேரம்தான் டிஏபி-க்கு இத்தகவல் தெரிய வந்தது. ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான்  ஒரு கடிதம் வாயிலாக அதனைத் தெரிவித்திருந்தார்.

1anthonyஅதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய டிஏபி ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தோனி லொக், பொதுமக்களின் நெருக்குதலுக்கு ஆர்ஓஎஸ் பணிந்து போயிருப்பதாகக் கூறினார்.

“பொதுமக்களின் அழுத்தத்துக்குப் பணிந்துதான் அவர்கள் கடிதம் வழங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனாலும், நாங்கள் எங்கள் திட்டப்படி நடந்து கொள்வோம்”, என்றார்.

டிஏபி-இன் திட்டம் இதுதான் – வேட்பாளர்களிடம் வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் அதிகாரிகளிடம் கொடுப்பதற்காக  இரண்டு கடிதங்கள்- டிஏபி தலைமைச் செயலாளரிடமிருந்து ஒன்றும் பாஸ் அல்லது பிகேஆரிடமிருந்து ஒன்றும்- கொடுக்கப்படும்.

“முதலில் டிஏபியின் நியமனக் கடிதத்தைக் கொடுப்போம். அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பாஸ் அல்லது பிகேஆரின் கடிதத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்”, என்று லோக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் நியமனக் கடிதத்தில், அவர்கள் கட்சி சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்து கையொப்பமிடுபவர் கட்சித் தலைமைச் செயலாளர். அவரை ஆர்ஓஎஸ் அங்கீகரிக்காததால் அவர் கொடுக்கும் கடிதத்தைத் தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுக்கலாம் என்று டிஏபி நினைக்கிறது..

1ros1எனவேதான், பாஸும் பிகேஆரும் தங்கள் கட்சி சின்னங்களை டிஏபி வேட்பாளர்கள் பயன்படுத்த அனுமதியளிக்கும் கடிதங்களை வழங்கியுள்ளன.

அதே நேரத்தில், டிஏபி சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல் அதிகாரிகள் இப்போது அனுமதித்தாலும் பின்னர் ஆர்ஓஎஸ்-இன் ஏப்ரல் 17ஆம் தேதி  கடிதத்தைக் காரணம்காட்டி தேர்தல் முடிவுகளைச் செல்லாதென அறிவித்து விடலாம் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

அப்துல் ரஹ்மான் நேற்று அனுப்பிவைத்த கடிதம், டிஏபி தலைமைச்செயலாளர் கைபெழுத்திட்ட வேட்பாளர் நியமனக் கடிதத்தால் சட்டச் சிக்கல் எழுமா எழாதா என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. .

கடந்த ஆண்டு டிசம்பர் 15-இல் நடந்த டிஏபி கட்சித் தேர்தல் குறித்து ஒரு சர்ச்சை இருப்பதாக அது தெரிவித்தது.

“சர்ச்சைக்குத் தீர்வுகாண என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை இந்த அறிவிக்கை கண்ட ஒரு மாதத்துக்குள் டிஏபி தெரியப்படுத்த வேண்டும்.

“மேலும், டிசம்பர் 15-இல் தேர்வுசெய்யப்பட்ட பொறுப்பாளர்களை மட்டுமே ஆர்ஓஎஸ் அங்கீகரிக்கவில்லை என்பதையும் இதன்வழி தெரியப்படுத்திக் கொள்கிறோம்”, என அப்துல் ரஹ்மான் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

TAGS: