வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாதைத் தொடர்ந்து சுயேச்சைகளாக நிற்கும் டிஏபி உறுப்பினர்களுடைய கட்டொழுங்கற்ற எந்த நடவடிக்கையையும் டிஏபி சகித்துக் கொள்ளாது.
நடப்பு தெரத்தாய் சட்ட மன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ-க்கும் கோத்தா மலாக்கா எம்பி சிம் தொங் ஹிம்-முக்கும்
பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்களது சுயேச்சை வேட்பு மனுவை மீட்டுக் கொள்ள 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பதாக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் சொன்னார்.
அவர்கள் அவ்வாறு செய்யா விட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என கர்பால் எச்சரித்தார்.
“அது ஒழுங்கை மீறிய கடுமையான நடவடிக்கை. அதனை ஏற்க முடியாது, மன்னிக்க முடியாது, சகித்துக்
கொள்ள முடியாது,” என கர்பால் இன்று பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.
“அவர்களது நடவடிக்கை டிஏபி வேட்பாளர்களுடைய வாய்ப்புக்களைச் சீர்குலைப்பதற்குச் சமமாகும். அது
ஒழுங்கை மீறிய கடுமையான நடவடிக்கை,” என அவர் மேலும் கூறினார்.
அந்த இரு வேட்பாளர்களுடைய கட்சி ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கர்பால் குறிப்பிட்டார்.
நேற்று வேட்பாளர் நியமனத்தின் போது லீ-யும் சிம்-மும் தங்கள் சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.
லீ தமது சட்ட மன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள களமிறங்கியுள்ள வேளையில் கோத்தா மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியில் டிஏபி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சிம் கோத்தா லக்ஸ்மணா சட்ட மன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்.
அவர்கள் இருவரும் தங்கள் நடவடிக்கைகாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு தங்கள் வேட்பு மனுவை மீட்டுக் கொள்ளவும் வேண்டும். அத்துடன் சுயேச்சைகள் என்ற முறையில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் தங்கள் தொகுதி மக்களுக்கு கூறவும் வேண்டும் என கர்பால் சொன்னார்.
“நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். கட்டுக்கோப்பை மீறிய நடவடிக்கைகளை சகித்துக் கொள்வதை விட ஒர் இடத்தை டிஏபி இழப்பதே மேலானது,” என புக்கிட் குளுகோரில் போட்டியிடும் அவர் கூறினார்.
“அவர்கள் மன்னிப்புக் கேட்பது மட்டும் போதாது. அவர்கள் பகிரங்கமாக அறிக்கையும் வெளியிட வேண்டும்.”