செம்பருத்தி இணையத்தளம் தாக்கப்பட்டது!

Cyber attack against semparuthiமலேசியகினியுடன் இணைந்து நேரடி செய்தி ஊடகமாக பங்காற்றி வரும் செம்பருத்தி.காம் மீது கடந்த சில நாட்களாக இணைய தாக்குதல் (Cyber attack) மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கடந்த 28-ஆம் தேதி மாலை விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலில் எமது இணையத்தளம் காலை மணி 10.41 தொடக்கம் மாலை மணி 6.27 வரை முற்றாகச் செயலிழந்து போனது.

செம்பருத்தி இணையத்தளம் மீது வினாடிக்கு 15 லட்சம் பாக்கட் பரிமாற்ற தாக்குதல் நிகழ்ந்தாகவும், அதனால் அவற்றை தகர்க்க இணையத்தளம் கட்டாயமாக முடக்க கூடிய சூழல் உண்டாக்கப்பட்டதாக இணையத்தளச் சேவை வழங்கும் நிறுவனம் அறிவித்தது.

தற்போது செம்பருத்தியை சுமார் 33,000-க்கும் மேற்பட்டோர் நாளொன்றுக்கு பார்வையிடுகின்றனர். மலேசியாவிலேயே அதிகமானோர் பார்க்கும் தமிழ் செய்தி இணையத்தளமும் இதுதான்.

Ji Wi Kathaiahசெம்பருத்தி இணையத்தளத்தை வாசகர்கள் பார்வையிடுவதில் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதாக கடந்த சில நாட்களாக தொலைபேசி வழி தனக்கு புகார் கிடைத்து வருவதாக கூறுகிறார் அதன் பொறுப்பாளர்களில் ஒருவரான ஜீவி காத்தையா.

இது சார்பாக நாங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலாது. எங்களின் இந்த சேவை மக்களிடையே விழிப்புணர்வுவையும் உரிமையுணர்வையும் கொண்டுவருவதாகும். இலவசமான சேவையை வழங்கும் எங்களால் உயரிய தொழில்நுட்ப வழிமுறைக்கு செல்ல இயலாது.

13-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் செம்பருத்தி இணையத்தளம் மலேசியகினியுடன் இணைந்து தேர்தல் நிலவரங்கள் குறித்த செய்திகளை உடனுக்குடன் வாசகர்களுக்கு வழங்கிவருகிறது. எனினும், எமது இணையத்தள சேவையில் தடை ஏற்படுத்த மீண்டும் இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என அறியமுடிகிறது.

நம் சமுகத்திற்கு இழைக்கப்படும் தீமைகளையும் சுரண்டல்களையும் தைரியமாக மக்கள் முன்னிறுத்தி தொடர்ச்சியான சிந்தனைத் தளமாக செம்பருத்தி இயங்கிவருகிறது. ஆகவே, இதுபோன்ற தாக்குதல்களினால் செம்பருத்தியை எளிதில் அழித்துவிடலாம் என்று பகல் கனவு காணவேண்டாம் என இத்தாக்குதலில் தொடர்புபட்ட தரப்பினருக்கு நினைவுறுத்த விரும்புகிறோம்.

மீண்டும் எமது இணையத்தளம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு எமது இணைய சேவை முடக்கப்பட்டால், வாசகர்கள் www.facebook.com/semparuthi என்ற எமது முகநூல் பக்கத்திற்குச் சென்று தேர்தல் நிலவரம் குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

* ‘சேஞ் திஸ் கவர்மெண்டு கவர்மெண்டுலா’ என்ற கொலைவெறி பாணியிலான தேர்தல் பாடல் காணொளி செம்பருத்தியில் பதிவேற்றம் கண்ட முதல் ஐந்து நாட்களில் சுமார் 88,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

TAGS: