மே 13ல் டிஏபி சம்பந்தப்படவில்லை என்கிறார் முன்னாள் அம்னோ பிரமுகர்

tamrin1969ம் ஆண்டு மே 13 கலவரங்களுக்குப் பின்னணியில் டிஏபி தேசிய ஆலோசகர் லிம் கிட் சியாங்  இருந்ததாகக் கூறப்படுவதை முறியடிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முன்னாள்  அம்னோ பிரமுகர் முகமட் தாம்ரின் அப்துல் காபார் எதிர்பாராத வகையில் உதவியிருக்கிறார்.

அந்தச் சம்பவம் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட அம்னோ தலைவர்கள் தீட்டிய ‘சிறிய புரட்சியின்’  விளைவாகும் என முன்னாள் பத்து பெர்ண்டாம் எம்பி-யும் முன்னாள் துணைப் பிரதமர் காபார் பாபாவின்  புதல்வருமான அவர் சொன்னார்.

“அந்தச் சம்பவம் அம்னோ ஆட்கள் திட்டமிட்ட சிறிய புரட்சி என்றும் அதில் மகாதீர் சம்பந்தப்பட்டுள்ளார்  என்றும் அப்போது அம்னோ இளைஞர் பிரிவில் இருந்த என்னிடமும் அன்வார் இப்ராஹிடமும் அப்போதைய  உள்துறை அமைச்சர் முகமட் கசாலி ஷாபி சொன்னார்,” என தாம்ரின் நேற்று கேலாங் பாத்தாவில் இரண்டு  பக்காத்தான் செராமாக்களில் கூறினார். 

“மே 13 சம்பவம் அதிகாரத்தைக் கைப்பற்ற அம்னோ தலைவர்கள் திட்டமிட்டு செய்த வேலை என்றும் பின்னர்  அவர்கள் அதற்கு டிஏபி-யும் சீனர்களும் காரணம் என பழி சுமத்தினர் என நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு  அப்துல் ரஹ்மான் தாம் காலமாவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னர் தி ஸ்டார் நாளேட்டில் ‘As I See It’  என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.”

tamrin21969 இனக் கலவரம் அப்போதைய துணைப் பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேன் துங்குவுக்கு எதிராக நடத்திய  புரட்சியின் விளைவு என கல்வியாளர் குவா கியா சூங் வெளியிட்ட வாதங்களை தாம்ரின் வெளியிட்ட தகவல்  ஆதரவாக உள்ளது.

கலவரங்களுக்குப் பின்னர் துங்கு ராஜினாமா செய்ய வேண்டும் என பகிரங்கமாக கடிதம் எழுதிய மகாதீரை  துங்கு அம்னோவிலிருந்து விலக்கியதையும் தாம்ரின் நினைவு கூர்ந்தார்.

“துங்கு விலகிய பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட ரசாக் மகாதீரை அம்னோவுக்குள் மீண்டும்
சேர்த்துக் கொண்டு கல்வி அமைச்சராகவும் நியமித்தார்.”

“துங்கு விலக வேண்டும் என நெருக்குதல் தொடுத்ததற்காக மகாதீருக்கு ரசாக் நன்றிக் கடன்பட்டிருந்ததை அது  காட்டியது,” என விளக்கிய தாம்ரின் கலவரங்கள் மூண்ட போது கிட் சியாங் கோலாலம்பூரில் இல்லை என்றார்.

tamrin3மலாய் வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக அந்தச் சம்பவத்தை அம்னோ மீண்டும் பயன்படுத்துகிறது எனக் கூறிய அவர், பிஎன் விரக்தி அடைந்துள்ளதை அது காட்டுவதாகச் சொன்னார்.

ஜோகூர் சீனர்களிடையே அரசாங்க எதிர்ப்பு வலுத்து வருவது பக்காத்தானுக்குச் சாதகமாக அமைந்துள்ளதால் அந்த மாநிலத்தில் மலாய் வாக்காளர்களுடைய ஆதரவை வலுப்படுத்த அம்னோ இனவாத அட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

மே 13 கலவரங்களுக்கு டிஏபி-யும் கிட் சியாங்கும் காரணம் எனக் குற்றம் சாட்டும் பிரசுரங்களை பிஎன் ஊழியர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.

அந்தக் குற்றச்சாட்டை முறியடிக்கவும் டிஏபி-யையும் கிட் சியாங்கையும் பாதுகாக்கவும் பக்காத்தான் முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராஹிம், முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் முகமட் தாயிப்
போன்றவர்களை கொண்டு சென்றுள்ளது.

“எது இனவாதக் கட்சி ?”

தாமான் ஸ்கூடாய் இண்டாவில் நிகழ்ந்த முதல் செராமாவில் பேசிய தாம்ரின் டிஏபி இனவாதக் கட்சி அல்ல என்பதை மெய்பிக்க டிஏபி, மசீச ஆகியவற்றின் பின்னணிகளை தொட்டுப் பேசினார்.

“1966ம் ஆண்டு அமைக்கப்பட்ட டிஏபி-யில் 10,000க்கும் மேற்பட்ட மலாய், இந்திய, பஞ்சாபி உறுப்பினர்கள்  உள்ளனர். அதன் முதலாவது கட்சித் தேர்தலின் போது டயாங் இப்ராஹிம் என்பவர் அதன் உதவித் தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.”

“அந்தக் கட்சி தோற்றம் பெற்றது முதல் கடந்த தேர்தல் வரையில் 55 மலாய் வேட்பாளர்கள் டிஏபி சின்னத்தில்
நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.”

ஆனால் 1951ம் ஆண்டு உதயமான மசீச ஒர் இந்தியர் அல்லது மலாய்க்காரர் கூட தனது உறுப்பினராகக் கூட அனுமதித்தது இல்லை என்பதை தாம்ரின் சுட்டிக் காட்டினார்.

“ஆகவே எது இனவாதக் கட்சி ?” என அவர் கேட்டார்.

“1986ம் ஆண்டு நான் எம்பி-யானதிலிருந்து நான் கிட் சியாங்கை அறிவேன். அவர் மலாய்க்காரர்களுடைய உரிமைகளுக்கு எதிராக அவர் ஒரு போதும் பேசியதில்லை. மலேசியர்களுக்கு மலேசியா என்னும் கோட்பாட்டுக்காக அவர் போராடினார். ஒரே மலேசியா கோட்பாட்டிலிருந்து அது எந்த வகையில் வேறுபட்டது? கிட் சியாங் ஊழல்வாதி அல்ல என்பது தான் ஒரே வேறுபாடு.”

tamrin5அம்னோ தலைவர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட மலாய் சிறுமிக்காக  பேசியதற்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான்  எங்-கிற்கு மலாய்க்காரர்கள் நன்றி சொல்ல வேண்டும் என தாம்ரின் கேட்டுக் கொண்டார்.

13வது பொதுத் தேர்தலில் மசீச-வுக்கு கூடினபட்சம் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்
என அண்மையில் நான் சந்தித்த முன்னாள் மசீச தலைவர் ஒங் கா திங்-கும் முன்னாள் துணைத் தலைவர் லிம்
ஆ லெக்-கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

“எப்படி வெற்றி பெறுவது ? மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மிங் வம்சாவளியைச் சேர்ந்த போருக்குச் செல்லாத முதலாவது ஜெனரல்.”

“சுவா ஒரே ஒரு போரில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளார்- அது காத்ரினா ஹோட்டலில் நிகழ்ந்த சண்டை ? ” என பத்து பஹாட் ஹோட்டல் ஒன்றில் சுவா மாது ஒருவருடன் செக்ஸ் உறவு கொண்டது வீடியோவில் பதிவு செய்யப்பட்டதை குறிப்பிட்டு அவர் கூறினார்

TAGS: