மே 13 பற்றி ஹாடி சொன்னதை முன்னாள் கெராக்கான் பிரமுகர் ஒருவர் ஆதரிக்கிறார்

Gohஅம்னோ 1969 மே 13 கலவரங்களுக்கு திட்டம் தீட்டியதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றம்  சாட்டியுள்ளதை முன்னாள் கெராக்கான் பிரமுகர் ஒருவர் ஆதரித்துள்ளார்.

அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக 44 ஆண்டுகளுக்கு முன்பு அம்னோ அந்த இனக் கலவரங்களுக்கு வித்திட்டதாக கடந்த திங்கட்கிழமையன்று பேராக் கோலா கங்சாரில் அரசியல் கூட்டம் ஒன்றில் ஹாடி  கூறியிருந்தார்.

“மே 13 இன அடிப்படையைக் கொண்டதல்ல. அது ஒர் அரசியல் நிகழ்வாகும்,” என முன்னாள் கெராக்கான்  தலைவர் கோ செங் தெய்க் மலேசியாகினியிடம் கூறினார்.

“அந்தத் திட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே
சம்பந்தப்பட்டிருந்தனர். பாஸ் உறுப்பினர்களுக்கு மே 13-உடன் எந்தத் தொடர்பும் இல்லை.”

70 வயதான கோ, துணை அமைச்சராகவும் பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினராகவும் 25 ஆண்டுகளுக்கு மேல்
பணியாற்றியுள்ளார். அவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த போது அந்தக்
கலவரங்கள் தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளைச் செய்து ” மே 13 சம்பவமும் மலேசியாவில் ஜனநாயகமும்”  (‘The May Thirteenth Incident and Democracy in Malaysia’) என்னும் தலைப்பில் புத்தகம் ஒன்றையும் 1971ம்  ஆண்டு வெளியிட்டுள்ளார்.goh1

அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியலில் சேர்ந்தார். அப்போதைய பிரதமர் அப்துல் ரசாக்  ஹுசேனுக்கு நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1969ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஸ், டிஏபி, கெராக்கான் ஆகியவை எதிர்பாராத வெற்றிகளை அடைந்த  பின்னர் எதிர்க்கட்சிகள் நடத்திய வெற்றி ஊர்வலங்களுக்கு பதில் நடவடிக்கையாக அம்னோ ஊர்வலத்தை
நடத்துவதற்கு முன்னரே கோலாலம்பூரில் கலவரங்கள் தொடங்கி விட்டதாக கோ சொன்னார்.

“மாநில முதலமைச்சருடைய அதிகாரத்துவ இல்லத்திற்கு முன்னர் ‘வெற்றி’ ஊர்வலம் தொடங்குவதற்கு  முன்னரே, சட்ட ஆட்சியை நிலை நிறுத்துவதாக பெருமையடித்துக் கொள்ளும் ஒர் ஆளும் கட்சியின்  உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கலவரத்தைத் தொடங்கி விட்டனர்,” என்றார் அவர்.

வருத்தமான அவமானமான நாள்

அந்த வன்முறைகள், சபாவில் அண்மையில் நிகழ்ந்த ஆயுதமேந்திய ஊடுருவலைப் போன்று குறிப்பிட்ட
வட்டாரத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளதால் தேசிய அளவில் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்ய வேண்டிய
அவசியமில்லை என கோ இன்னும் கருதுகிறார்.

அந்தக் கலவரங்கள் பெரும்பாலும் அரசியல் உந்துதலைக் கொண்டிருந்தன என்றும் அவர் சொன்னார்.

goh2“அதனால் தான் கலவரங்கள் தேசிய அளவில் நிகழவில்லை என்றும் கோலாலம்பூரில் மட்டுமே நிகழ்ந்தது  என்றும் அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் கூறினார்.”

“மே 13ம் தேதியும் அதற்குப் பின்னரும் தீவகற்ப மலேசியாவில் மற்ற எந்தப் பகுதியிலும் அமைதிக்கு பங்கம்  ஏற்படவும் இல்லை, வன்முறையும் நிகழவில்லை.”

அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டதால் நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஹார்வார்ட் உபகாரச் சம்பளம் பெற்ற முதலாவது மலேசியர் கோ ஆவார். அவர் தற்போது சன்வே  பல்கலைக்கழகத்தில் adjunct பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இப்போது ஏன் அந்த விவகாரம் பற்றிப் பேசுகின்றீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த கோ,
ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மே 13 பற்றி அடிக்கடி பேசப்பட்டு வருவதால்
இன்றைய இளைஞர்களுக்கு அந்தப் பிரச்னைக்கு பின்னணியில் உள்ள உண்மை தெரிய வேண்டும் என்றார்.

“மே 13 மலேசியர்களுக்கு வெற்றித் திருநாள் அல்ல. அது வருத்தத்தையும் அவமானத்தையும் தரும் நாள்,”
என்று கோ சோகத்துடன் சொன்னார்.