வட ஜோகூரில் பரப்புரையைத் தொடக்கினார் கிட் சியாங்

1 kitதென் ஜோகூரில் பரப்புரை செய்து வந்த டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், தேர்தல் பரப்புரைக் காலம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதைத் தொடர்ந்து வட ஜோகூரில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார்.

லிம், இன்று லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் பரப்புரையைச் செய்தார். அங்கிருந்து தங்காக், மூவார் ஆகிய நகரங்களுக்கும் இறுதியில் செகாமாட்டுக்கும்  செல்வார். லாபிஸில் அவர் ச்சாஆ, பெகொக், லாபிஸ் நகரம், தெனாங் ஆகிய இடங்களில் பேசினார்,

டிஏபி தேர்தல் பணியாளர்கள், லாபிஸ் பிஎன் வேட்பாளர் சுவா டீ யோங் தேர்தல் நெருங்கும் வேளையில் நிறைய பணத்தையும் மற்ற வளங்களையும் கொட்டி பரப்புரை செய்வது  கவலையளிப்பதாகக் கூறினர்.

“பணத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். பல காப்பிக்கடைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கள் நிகழ்வுகளை நடத்த முடியவில்லை. அவ்வளவு பணத்தைச் செலவிட எங்களால் இயலாது”, என்று ஒரு வட்டாரம் கூறிற்று.

என்றாலும் லிம்மின் வருகை, அங்கு டிஏபி-க்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் லாபிஸ் டிஏபி வேட்பாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

‘லாபிஸ் நிலைமை வேறு’

“லாபிஸில் பெரிய செராமாக்கள் நடத்த முடியாது. இங்குள்ள நகரங்கள் சிறியவை; தூரம் தூரமாக அமைந்துள்ளன. அதனால் லிம் இங்கு வந்து நான்கு இடங்களுக்குச் சென்று பரப்புரை செய்ய உதவுகிறார்”, என்றாரவர்.

1 kit1பிஎன் நிறைய செலவு செய்வது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தாலும் என்றாலும் டிஏபி அங்கு வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருப்பதாக ராமகிருஷ்ணன் நம்புகிறார்.

“சீனப் பகுதிகளில் அதன் தாக்கம் அவ்வளவாக இருக்காது. இந்தக் கடைசி சில நாள்களில் இந்தியர்கள், மலாய்க்காரர்கள் வாழும் பகுதிகளில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்”, என்றார்.

லிம் சென்ற இடங்களில் 200-400 பேர் கூடினர். இந்தத் தேர்தலில் கூட்டரசின் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை முடிவு செய்வதில் ஜோகூர் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை லிம் தாம் சென்ற இடங்களில் எல்லாம் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லிம், ஜோகூரில் குறைந்தது ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுவது பக்காத்தான் ரக்யாட்டின் இலக்கு என்றார். முடிந்தால் 13 தொகுதிகளையாவது வெல்லவும் அது விரும்புகிறது.

TAGS: