இன்று நள்ளிரவு 12 மணிக்கு 13வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவுக்கு வரும் வேளையில் வாக்காளர்களுக்குப் பிரபலமான செய்தி இணையத் தளங்களிலிருந்து அனுப்பப்படுவதாக கூறிக் கொண்டு பொய்யான செய்திகள் அனுப்பப்படுகின்றன.
நேற்றிரவு மலேசியாகினியிலிருந்து அனுப்பப்படுவதாக கூறிக் கொண்டு பொய்யான எஸ்எம்எஸ் செய்திகள் பல கைத் தொலைபேசி பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மெர்தேக்கா மய்யம் மேற்கொண்ட அண்மைய கருத்துக்கணிப்பு முடிவுகளை மலேசியாகினி வெளியிட்ட சிறிது நேரத்தில் மலேசியாகினியிடமிருந்து வந்ததாகக் கூறிக் கொண்ட செய்தியைத் தனிநபர் ஒருவர் இரவு மணி 7.03க்கு அனுப்பியுள்ளார்.
“மெர்தேக்கா மய்யம் இன்று வெளியிட்ட தேர்தலுக்கு முந்திய ஆய்வு முடிவுகள், நஜிப்பின் செல்வாக்கு மேலும் 7 விழுக்காடு கூடியுள்ளது. பிஎன் பக்காத்தானைக் காட்டிலும் 11 விழுக்காடு முன்னணியில் உள்ளது/ எம்கினி” என அந்த பொய்யான எஸ்எம்எஸ் செய்தி தெரிவித்தது.
பக்காத்தான் ஆட்சி புரிய வேண்டும் என 42 விழுக்காட்டினர் விரும்புவதாகவும் பிஎன் ஆட்சி செய்ய வேண்டும் என 41 விழுக்காட்டினர் விரும்புவதாகவும் கூறும் மெர்தேக்கா மய்ய ஆய்வு முடிவுகளை மலேசியாகினி இதற்கு முன்னர் வெளியிட்டிருந்தது.
ஏப்ரல் 28க்கும் மே 2க்கும் இடையில் தீவகற்ப மலேசியாவில் வாக்காளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அந்த நிலையை உணர்த்தியுள்ளதாக மெர்தேக்கா மய்யம் கூறியது.
தகவலை சரி பார்த்துக் கொள்ளுங்கள்
அந்த பொய்யான எஸ்எம்எஸ் செய்திகளை அனுப்பிய கைத் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அந்த எண்ணில் இருந்த நபர் தொடர்ந்து அழைப்பைத் துண்டித்துக் கொண்டிருந்தார்.
நேற்றிரவு மலேசியாகினியிலிருந்து அந்த எஸ்எம்எஸ் செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவதை அதன் ஆசிரியர் ஸ்டீவன் கான் மறுத்தார்.
“வரும் நாட்களில் எஸ்எம்எஸ், மின் அஞ்சல், சமூக ஊடகங்கள் வழியாக உங்களுக்கு கிடைக்கும் அத்தகைய பொய்யான செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அந்தத் தகவலின் உண்மையான ஆதாரத்தை சோதனை செய்து கொள்வது நல்லது.”
இதனிடையே மலேசியா இன்சைடரும் தனது இணையத் தளத்திலிருந்து அனுப்பப்படுவதாக கூறிக் கொண்டு பொய்யான செய்திகள் மின் அஞ்சல் வழி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்த பொய்ச் செய்தியும் அதே மெர்தேக்கா மய்ய ஆய்வு முடிவுகள் சம்பந்தப்பட்டதாகும்.
அந்த பொய்ச் செய்தியில் இடம் பெற்றுள்ள வாசகம் இது தான்: “பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் ரசாக்கின் செல்வாக்கு “என்றுமில்லாத” 73 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.”