மகாதிர்: தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியா அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது?

dr mபொதுத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பக்காத்தான் ரக்யாட் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் பேரணிகளைச் சாடிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், போகும் போக்கைப் பார்த்தால் தேர்தல்களுக்குப் பதிலாக தெரு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகும்போல் தெரிகிறது என்று குத்தலாகக் குறிப்பிட்டுள்ளார்.

“தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அரசாங்கத்தைத் தேர்வு செய்வதுதான் நல்லதுபோலத் தெரிகிறது. அதில் மோசடி எல்லாம் இருக்காது போலும்”, என்று வழக்கம்போல் தம் வலைப்பதிவான Chedet-இல் கிண்டலடித்துள்ளார்.

தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்க நீனைத்தால் அது நாட்டில் தொடர் கொந்தளிப்பைத்தான் உண்டுபண்ணும் என்று மகாதிர் எச்சரித்தார். ஏனென்றால், அதன்பின்னர் தோற்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்களும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்து புதிய அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்ப்பார்கள்.

“பின்னர் வளர்ச்சி இருக்காது. வறுமை எங்கும் பரவும்.  நாடு உதவிக்குக் கை ஏந்த வேண்டிய நிலை ஏற்படலாம். முடிவில் . சுதந்திரத்தையே இழக்கும்”.

ஆனால், ஜனநாயக தெரு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைப்பவர்கள் இதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கொடுக்கும் ஒரு சிறிய விலையாகத்தான்  இதை நினைப்பார்கள் என்றாரவர்.

ஏமாற்றிவிட்டதாக சொல்வதுதான் தோற்றவர்களின் வழக்கம்

drm 1“ஆட்சியைக் கைப்பற்றுவதில் தோற்றுப்போனவர்கள் வெற்றியாளர்கள் ஏமாற்றிவிட்டார்கள், மோசடி செய்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்றுதான். புதிய தேர்தல் வேண்டும். மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுப்பார்கள்”.

தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். சில நேரங்களில் அவை வன்முறை ஆர்ப்பாட்டங்களாக மாறுவதுண்டு. கூடவே, வேலை நிறுத்தம், பொது ஒழுங்கை கெடுக்கும் நடவடிக்கைகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படும்.

“ஆர்ப்பாட்டங்கள் பெரிதாக இருந்தால் போலீசால் கட்டுப்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படியும் போலீஸ் அடக்க முனைந்தால் வன்முறையில் இறங்குவார்கள். போலீசும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் அவர்களின் வெளிநாட்டு ஆதரவாளர்கள் போலீஸ் வன்கொடுமை என்று குறை சொல்வார்கள்.

“மறுபுறம் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டு முன்பு தோற்றவர்கள் வெற்றி பெற்று, முன்னாள் வெற்றியாளர்கள் தோற்றுப்போனால் தோற்றுப்போனவர்கள், வென்றவர்களை நோக்கி ஏமாற்றி விட்டார்கள், தில்லுமுள்ளு செய்து விட்டார்கள் என்று சொல்லத் தொடங்குவார்கள்.

“தெரு ஆர்ப்பாட்டங்கள் நடக்கும், வேலை நிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். புதிய அரசாங்கத்தைக் கவிழ்க்க என்னென்ன தேவையோ அத்தனையையும் செய்வார்கள். இப்படியே தொடரும்”, என்றாரவர்.

TAGS: