ஒரு தேர்தல் தொகுதியின் எல்லை திருத்தி அமைக்கப்பட்டதும் அங்கு பிஎன் கூட்டணிக்கு எளிதாக வெற்றி கிடைத்து விடுகிறது என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் மையம் (யுஎம்சிடெல்) கூறுகிறது.
ஒரு தொகுதியின் எல்லைக்கோடுகள் திருத்தி அமைக்கப்பட்டதும் அத்தொகுதியில் பிஎன்னுக்கு சராசரி 60 விழுக்காடு வாக்குகள் கிடைத்து விடுவதைத்தான் வரலாறு காண்பிக்கிறது என யுஎம்சிடெலின் துணை இயக்குனர் அமீர் சைபுடி கசாலி நேற்று ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார்.
“தொகுதி எல்லைத் திருத்தம் தொடர்பான விதிமுறைகளும் தெளிவாக இல்லை. தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்பதை அவை வலியுறுத்துவதில்லை”, என்றாரவர்.
இதனால், தேர்தல் தொகுதிகளை வரையறுப்பதற்கு ஒரு வழிகாட்டி இல்லாமல் போய்விடுகிறது.
அமீர் (வலம்), நேற்று பெட்டாலிங் ஜெயாவில் மெர்டேகா மையம் ஏற்பாடு செய்திருந்த 13வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய கருத்தரங்கில் பேசினார்.
யுனிவர்சிடி மலேசியா சரவாக்கைச் சேர்ந்த டாக்டர் ஆர்னோல்ட் புயோக்கும் அதில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தார். அவர், சாபா தேர்தல் முடிவுகள் அங்கு “வட்டாரம் சார்ந்த குறுகிய போக்கு” குறைந்து வருவதைக் காட்டுவதாகக் கூறினார்.
பிகேஆர் ஏழு சட்டமன்ற இடங்களை வென்றுள்ளது, வாக்காளர்கள் ஸ்டார் போன்ற உள்ளூர் மாற்றரசுக்கட்சிகளைப் புறக்கணித்திருப்பதைக் காண்பிக்கிறது.
பல இடங்களில் பிஎன்னுக்கு 50 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் வாக்குகள் கிடைத்தன என்றாலும் அதனால் பெரும்பான்மை வெற்றி பெற முடிந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய புயோக் (இடம்), பிஎன்னுக்கு எதிரான வாக்குகளை உள்ளூர் கட்சிகளும் தேசிய கட்சிகளும் சிதறடித்து விட்டதுதான் இதற்குக் காரணமாகும் என்றார்.
PKR கிராமப்புறங்களில் அதிக அக்கறைக் காட்டினாலன்றி அவர்களால் வெற்றி பெறுவது சுலபமல்ல. காரணம் அம்னோ அங்கு பலமாக வேரூன்றிக்கிறது. வயதானோரிடையே இன்னும் ‘எங்களை வாழ வைத்தவர்கள்’ என்னும் விசுவாசம் அவர்களிடையே இருக்கிறது. அதனால் தொகுதி சீரமைப்பு என்பது அம்னோவுக்கு சாதகமாகவே இருக்கும்.