மகாதிர்: மக்களுக்கு வேறு வழி இல்லாததால் அம்னோ வென்றது

1 dr mமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்களுக்கு வேறு வழியில்லை அதனால்தான் அம்னோ வென்றது என்று கூறியிருப்பது பொதுத் தேர்தல் வெற்றியால் அம்னோ அடைந்த உற்சாகத்தை அப்படியே குன்றி போக வைத்துள்ளது.

“13வது பொதுத் தேர்தலில் அம்னோதான் கூடுதல் இடங்களை வென்ற கட்சி என்று நாம் பாராட்டி மகிழலாம். ஆனால் ஒன்று. இது மலாய்க்காரர்கள் இன்னமும் அம்னோவை ஆதரிக்கிறார்கள் என்பதால் கிடைத்த வெற்றி அல்ல.

“உண்மை என்னவென்றால், மக்களுக்கு வேறு வழி இல்லை, அதனால் அம்னோ வென்றது. அவர்களுக்கு டிஏபி-யுடன் சேர்ந்து அன்வார் இப்ராகிம் வெற்றிபெற்று விடுவாரோ என்ற பயம்”. மகாதிர் தம் வலைப்பதிவில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்,

1 dr m1ஆனால், இப்போக்கு அடுத்த தேர்தல்வரை தொடருமா என்பது சந்தேகம்தான் என்றவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அம்னோ, உள்ளுக்குள் இருக்கும் ஊழலையும் தன்னலப் போக்கையும் துடைத்தொழிக்க வேண்டும். இல்லையேல் மலாய்காரர்கள் வேறு வெற்றியாளர்களைத் தேடி சென்று விடுவார்கள்”.

அம்னோவுக்கு முன்பு இருந்ததுபோன்ற உயர்ந்த மதிப்பு இப்போது இல்லை என்றவர் வருத்தப்பட்டார்.

“மலாய்க்காரர்கள் பலரும் அதனை ஒரு பொருத்தமில்லாத கட்சியாக, நிராகரிக்கப்பட வேண்டிய கட்சியாகத்தான் நினைக்கிறார்கள்”.

‘அம்னோவில் தன்னலம்’

“ஏனென்றால், அம்னோ இனத்துக்காக, சமயத்துக்காக, நாட்டுக்காக போராடுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்காகவும் அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் போராடும் கட்சியாகவே கருதப்படுகிறது. அதுதான் உண்மையுமாகும்.

“அம்னோவில் பதவிக்கும் தரவரிசைக்கும்தான் போராட்டம் நடக்கிறது. பணத்துக்காக, சொந்தத்தில் சொத்துக்களைக் குவிக்க போராடுகிறார்கள்”.

இப்போதுள்ள தலைவர்கள் திறமைவாய்ந்த புதியவர்களுக்கு இடமளிப்பதில்லை. புதியவர்கள் தங்களுக்கு மிரட்டலாகி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அதுதான் அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றாரவர்.

திறமை குறைந்தவர்களைக் கட்சியில் சேர்த்தால் அவர்கள் தங்களுக்கு மிரட்டலாக இருக்கமாட்டார்கள் என்பது அவர்களின் நினைப்பு. எனவே, இந்தத் தலைவர்கள் கட்சியிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்தத் திறமைகுறைந்தவர்களே இவர்களின் இடத்துக்கு வருவார்கள். இது கட்சியின் வீழ்ச்சிக்கு மேலும் வழிகோலும்.

“காலம் செல்லசெல்ல அம்னோவில் திறமைகுறைந்தவர்களே அதிகம் இருப்பார்கள்”, என்று கூறியவர், திறமையானவர்கள் எதிர்த்தரப்புக்குச் சென்று விடுவார்கள் என்றார்.