மகாதிர்: தேர்தலில் ‘சீன இனவாதம்’ இருந்ததற்குப் பேரணிகளே சான்று

1 drபொதுத் தேர்தலுக்குப் பிந்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள்கூட்டமே  பொதுத் தேர்தலில் “சீன இனவாதம்”  இருந்ததற்கு தக்க சான்றாகும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்.

பேரணிகளில் “கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் சீனர்கள்”தான் என்றும் பேரணிகள் “பெரும்பாலும் சீனர் சம்பந்தப்பட்டவைதாம்”என்றும் வலைப்பதிவு ஒன்றில் மகாதிர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் விளைவாக நாட்டில் இனங்கள் தனித்தனியே பிரிந்து கிடக்கும் நிலை முன்னிலும் மோசமாகும் என்பதுடன் மலாய்க்காரர்கள் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மேலும் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகும் என்றவர் சொன்னார்.

1dr1“நாட்டுக்கு உள்ளேயும் வெளியிலும் பெரும்பாலும் சீன இளைஞர்களே கறுப்புச் சட்டை, கறுப்பு முகமூடி அணிந்து இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கிறார்கள். வழக்கமாக, இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் மலாய்க்கார் எண்ணிக்கைதான் அதிகம் இருக்கும்”.

“அரபு எழுச்சி பாணியில்” அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட இப்படிப்பட்ட பேரணிகளில் மலாய்க்காரர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு பாஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களில் “சம்பந்தப்படாதிருப்பது” ஒரு காரணமாக இருக்கலாம்.

சொல்லப்போனால், கடந்த தேர்தலில் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்த கட்சி என்றால் அது பாஸ்தான். பெரிதாக ஆதாயம் கண்டது டிஏபிதான்.

1dr2கடந்த தேர்தலில் பக்காத்தான் ரக்யாட்டில் அதிகமான இடங்களில் போட்டியிட்டது பாஸ்தான் ஆனால், “அவர்களின் கூட்டணி இனவாத டிஏபி-க்குத்தான் சாதகமாக அமைந்தது. பக்காத்தான் ரக்யாட்டில் மலாய்க்காரர்களை அதிகம் கொண்ட கட்சியான பாஸ்தான் குறைந்த ஆதாயம் கண்டது. டிஏபி 38 இடங்களையும் பிகேஆர் 30 இடங்களையும் வென்ற வேளையில் பாஸுக்கு 21 இடங்கள்தான் கிடைத்தன”, என்றவர் சொன்னார்.

இதிலிருந்து,  மலேசிய அரசியலையும் “ஏற்கனவே பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்தும்” சீனர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர டிஏபி முயல்வது தெளிவாக தெரிகிறது.

“இதுதான் தெள்ளத் தெளிவான இனவாதம். இது பிஎன் இதுவரை பரிந்துரைத்து வந்துள்ள இனங்களிடையே அதிகாரத்தையும், வளத்தையும் பகிர்ந்துகொள்வதையும் நிராகரிக்கிறது. இதன் விளைவாக இன முனைவாக்கம் (polarisation) உண்டாகிவிட்டிருப்பது தெளிவு. . வருங்காலத்தில் இது மேலும் மோசமடையலாம்”, என்றாரவர்.

 ‘டிஏபி  மலாய்க்காரர்களை வெறுக்கிறது’

1dr3மலேசியர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இனத்தை வைத்துத்தான் தீர்மானிக்கிறார்கள். இது, 60 ஆண்டுக்கால அரசியல் அனுபவத்தில் தாம் கண்ட உண்மை என்று கூறினார் மகாதிர்.

இதற்கு,  பிஎன்னின் முன்னணி சீனக் கட்சியான மசீச-வை “அம்னோவின் அடிவருடிகள்” என்று கூறி டிஏபி “இன உணர்வுகளை”த் தூண்டிவிட்டதை நம்பி சீனர்கள் அக்கட்சிக்கு ஆதரவாக திரண்டு நின்றதே நல்ல சான்றாகும்.

இனம்தான் முக்கியம்.  “வேட்பாளர் அல்லது கட்சிகளின் தகுதி, சித்தாந்தங்கள், மாற்றம் வேண்டும் என்ற நோக்கம் என்பதெல்லாம் இனத்துக்கு அடுத்தப்படியாகத்தான்”.

டிஏபி “மலாய்க்காரர்களை வெறுக்கும் நிலை” பல ஆண்டுகளாக தொடர்கிறது.  பக்காத்தானில் மலாய்க்கட்சிகளுடன் அது “தேர்தல் உடன்பாடு” செய்துகொள்கிறது என்றால், “தேர்தலுக்கு அது பயன்படுகிறது என்பதால்தான் செய்துகொள்கிறது”.

அவர்களின் “மலேசியர் மலேசியா” என்ற முழக்கமே மலாய்க்காரர்-அல்லாதார் ”இரண்டாம் தர குடிமக்களாக” நடத்தப்படுகிறார்கள் என்பதைக் குறிப்பாக உணர்த்துவதுடன் அவர்கள், மலாய்-எதிர்ப்பு நிலைபாட்டை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

பின்தங்கியுள்ள மலாய்க்காரர்களுக்கு உதவும் சமுதாய சீரமைப்பு நடவடிக்கைகளை  “இனவாதம்” என்று கூறி எதிர்ப்புத் தெரிவிக்கும் டிஏபி மலாய்காரர்களைத் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளவே முயல்கிறது.

“இன்று இனங்கள் ஆழமாக பிளவுபட்டுக் கிடக்கின்றன என்றால் அதற்கு டிஏபி மலாய்-சீனர்-இந்தியர் ‘கொங்சி’யை நிராகரிப்பதுதான் காரணமாகும்”, என்றாரவர்.

 

 

TAGS: