“நம் நாட்டு அரசாங்க ஊழியர்கள், தங்களுக்குச் சம்பளம் கொடுப்பது மக்களே, அன்றைய அரசாங்கம் அல்ல என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை ?”
வான் அகமட்: நான் என் வேலையைச் செய்துள்ளேன் எதற்காக விலக வேண்டும்?
பால் வாரென்: தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் (EC) வான் அகமட் வான் ஒமார் அவர்களே, உங்களை யார் அவமானப்படுத்தினார்கள் ? ஊகங்கள் அடிப்படையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக நீங்கள் சொல்வது சரியே.
சனிக்கிழமை வழக்குரைஞர் மன்ற கருத்தரங்கில் நீங்கள் நன்றாகத்தானே பேசினீர்கள். என்றாலும் கிளானா ஜெயா எம்பி வோங் சென் எழுப்பிய கேள்வி உங்களுக்குச் சங்கடத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அது நியாயமான கேள்வி. ஆனால் அதற்கு நீங்கள் அளித்த பதில் போதுமானது அல்ல.
நீங்களும் உங்கள் எஜமானரும் விரைவில் மாமன்னரைச் சந்தித்து 13-வது பொதுத் தேர்தலை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தெரிவிக்கப் போகின்றீர்கள். பொதுத் தேர்தல் தூய்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்டது என்பதே அதன் அர்த்தமாகும். அந்த அறிக்கை கௌரவமானது என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?
இல்லை என்றால் மாமன்னரிடம் பொய் சொல்வதற்கு என்ன அர்த்தம் ? தேச நிந்தனையா ? தேசத் துரோகமா ?
ஏரியஸ்46: அழியா மை குறித்து சரியான நேரத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் வான் அகமட்டும் அவரது குழுவினரும் அந்த மையின் ஆற்றல் பற்றி பொய் சொன்னதற்காகவும் அவர்களுடைய திறமையின்மைக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான விலையும் கொடுக்க வேண்டும்.
முன் கூட்டியே வாக்குகள் செலுத்தப்பட்ட கட்டத்திலேயே அழியா மை பல வாக்காளர்களிடம் நிலைத்திருக்கவில்லை என தேர்தல் ஆணையத்திற்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால் அந்த புகார்கள் மீது முறையான ஆய்வை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை. மாறாக பயன்படுத்துவதற்கு முன்னர் மை போத்தலைக் குலுக்கினால் போதும் என வான் அகமட் சொன்னார்.
அவரது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் தேர்தல் தினத்தன்று அது தவறு என நிரூபிக்கப்பட்டு விட்டது.
தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் மீது வான் அகமட் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது வேண்டுமென்றே பொய் சொல்லியிருக்க வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.
ஆவி வாக்காளர்கள், இரண்டு முறை வாக்களிப்பது போன்றவற்றுக்கு வழி வகுத்த நம்ப முடியாத வாக்காளர் பட்டியலைச் சமாளிப்பதற்காக அழியா மை அறிமுகம் செய்யப்பட்டது. ஆகவே அழியா மை விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடி, 13-வது பொதுத் தேர்தலின் நேர்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த வகையில் தேர்தல் ஆணையமும் அதற்கு உடந்தையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தே தாரேக்: தேர்தல் நடைமுறையைச் சீர்திருத்துமாறு பெர்சே தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோள் மீது வான் அகமட்டும் தேர்தல் ஆணையமும் ஒன்றும் செய்யவே இல்லை.
வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு அவருக்கு நான்கு ஆண்டுகள் இருந்தன. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. காலமான வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து அகற்றவும் முயற்சி செய்யவில்லை. அவர்களில் பலர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்கள். ஒவ்வொரு பெயருக்கும் முறையான முகவரி இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வாக்குகளைக் கவர லஞ்சம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட புகார்களை விசாரிக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அழியா மை இந்தியா, இந்தோனிசியா உட்பட பல நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையை எளிதாக அழித்து விட முடியும் என பலர் புகார் செய்துள்ளனர்.
இது வரையில் அந்த மையில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி தேர்தல் ஆணையம் எதுவும் சொல்லவில்லை. மாறாக அந்த குளறுபடியை மறைக்க ‘ஹலால்’ ‘carcinogens’ போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றது.
பல நெருக்கமான தொகுதிகளில் அஞ்சல் வாக்காளர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது தொடர்பில் தேர்தல் ஆணையம் தெளிவான பதிலையும் இது வரை தரவில்லை. வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் இது நிகழ்ந்துள்ளது.
வான் அகமட்டின் வார்த்தைகளைக் காட்டிலும் அந்த ஆதாரங்களே
முக்கியமானவை.
வியப்பு: நம் நாட்டு அரசாங்க ஊழியர்கள், தங்களுக்குச் சம்பளம் கொடுப்பது மக்களே, அன்றைய அரசாங்கம் அல்ல என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை ?
கொஞ்சம் கூட வருத்தப்படாமல் அப்பட்டமாக பொய் சொல்வது தேசத்
துரோகமாகும். உண்மையில் அது மக்களுடைய பொறுமையையும்
அறிவாற்றலுக்கும் சோதனை வைக்கிறது.
டூட்: ஆமாம், வான் அகமட் தமது வேலையை நன்றாகச் செய்துள்ளார். தமது கட்சியான அம்னோ 13வது பொதுத் தேர்தலில் மோசடியாக வெற்றி பெறுவதை அவர் உறுதி செய்துள்ளார். அதில் ஏமாற்று வேலையும் தில்லுமுல்லு நடவடிக்கைகளும் அடங்கும்.
அவர் தமது கேபிஐ ( முக்கிய அடைவு நிலைக் குறியீடு ) என அழைக்கப்படும் விஷயத்தை நிறைவேற்றியுள்ளதால் அவர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் ?