தவணைக்காலம் முடியும்வரை காத்திருக்கவும்: நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத் தேர்தலை நடத்த அவசரம் காட்டாமல் 2013 மார்ச்வரை பொறுத்திருக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் முகம்மட் அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது பக்காத்தான் ரக்யாட் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அவற்றின் சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டியிருக்கும்  என இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம்  மகாதிர்   குறிப்பிட்டார்.

முன்கூட்டியே பொதுத் தேர்தலை வைத்தால் பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்கள் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும் நேரத்திலேயே சட்டமன்றத் தேர்தலை நடத்த மறுக்கலாம், இதனால் அரசாங்கத்துக்குத்தான் பிரச்னை என்றாரவர்.

“நிலைமை மாற்றரசுக் கட்சிகளுக்குச் சாதகமாக அமைவதைத் தவிர்க்க தவணைக்காலம் முடியும் தருவாயில் தேர்தலை நடத்த வேண்டும்.அப்போதுதான் அவையும் வேறுவழியில்லாது சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டியிருக்கும்”.

நேற்று புத்ரா ஜெயாவில் ஒரு நிகழ்வில் பேசியபோது குறிப்பிட்ட கருத்தையே மகாதிர் இன்று மீண்டும் வலியுறுத்தினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு 2013 மார்ச்வரை அவகாசம் இருக்கிறது. ஆனால், நஜிப் விரைவில் திடீர் தேர்தலை நடத்தக்கூடும் என்று ஆருடம் கூறப்படுகிறது.

TAGS: