எது முக்கியமானது: மெட்ரிக்குலேசன் இடங்களா அல்லது சபாநாயகர் பதவியா?

kula-எம். குலசேகரன், எம்பி. ஜூன் 18. 2013.

இன்று ம.இ.கா வின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும் போது முக்கிய அங்கமாக பேரா மாநில சபாநாயகர் பதவிக்கான விவாதம் இடம்பெறும் என்று அறிகிறோம்.

அந்தப் பதவி ஒன்றும் அப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக எனக்குப் படவில்லை. மக்கள் கூட்டணி தனது ஆட்சியை பேரா மாநிலத்தில் அமைத்த போது பேரா இந்தியர்களின் விசுவாசத்திற்கு ஒரு நன்றிக் கடனாக, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியர் ஒருவருக்காக அதற்கு முன் கொடுக்கப்பட்டிராத அந்தப் பதவி வழங்கப்பட்டு ஒரு சாதனையாக உருவாக்கம் கண்டது. அதையே பின்பற்றி தேர்தலில் போட்டியிடாத  கணேசனுக்கு தேசிய முன்னணி, ஆட்சியைப் கைப்பற்றியபோது இந்தியர்களை சமாதனப்படுத்துவதற்காக ஓர் அலாங்கார நாற்காலி போல் அப்பதவி வழங்கப்பட்டது.

இப்பதவியையே கடந்த தேர்தலில் படுதோல்வி கண்ட ம.இ.காவிற்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று  தலைவர் பழனிவேல் பிடிவாதமாக இருப்பதால், அது இன்றய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ம.இ.கா தலைவர்கள் இன்னும் தங்களின் சமுதாயத்திற்கான இலக்குகளை சரியாக தேர்வு செய்ய வில்லை என்பதனை இது காட்டுகின்றது. மலேசிய இந்தியர்களின் இன்றைய தேவை சாபாநாயகர் பதவியில்லை என்பதனை மத்திய செயலவை உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவேண்டும். 1500 இடங்கள் என்பது இந்திய மாணவர்களின் எதிர்காலம்! சபையை அலங்கரித்துக் கொண்டு ஒரு தனி மனிதருக்கு மட்டுமே இலாபத்தைக் கொண்டு வரும் சபாநாயகர் பதவியை விட மாணவர்களின் அதிமுக்கியமானது.

சபாநாயகர் பதவி ம.இ.காவின் தன்மானப் பிரச்சனையோ அல்லது சமுதாயத்தில் பெரும் புரட்சியையோ,mic-logo வளர்ச்சியையோ கொடுக்கக் கூடிய பதவி அல்ல. அப்பதவி கொடுக்கப்பட்டாலும், கொடுக்கப்படாவிட்டாலும் அது சமுதாயத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக அந்தப் பதவியைக் கோராமலிருப்பதே தோல்வியுற்ற ம.இகாவின் தன்மானத்தைக் தற்காக்கும் ஒரு விவேகமான செயலாக  கருதப்படும் .

ஆனால் இன்று பறி போய்க்கொண்டிருக்கும் 1500 மெட்ரிகுலேசன் இடங்கள், ஒரு சமுதாயப் பிரச்சனை!

இந்திய மாணவர்களின் வளமான எதிர் காலத்திற்கு வித்திடும் ஒரு ஏணிப்படியாகிய அதில் சமுதாயத்தின் தன்மானப் பிரச்சனை அடங்கியுள்ளது, உரிமை அடங்கியுள்ளது.

அந்த 1500 மாணவர்களும் நாளை பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டதாரிகளாக வெளிவரும் பொழுது அதனால் எத்தனை ஆயிரம் பெற்றோர்களின் மனங்கள் குளிரும், எத்தனை ஆயிரம் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயரும், ஒட்டு மொத்த சமுதாயமும் அதனால் எவ்வளவு மேன்மையுறும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நாமொன்றும் அதிகமாகக் கேட்கவில்லை. பிரதமர் வாக்குறுதியின்படியும், ம.இ.காவினர் சொன்னது போலவும் ஒப்புக் கொள்ளப்பட்ட 1500 இடங்களைத்தான் கேட்கிறோம். இந்த கோரிக்கை ஏன் இன்று கூடும் மத்திய செயலவைக் கூட்டத்தில் முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எனது கேள்வி?

சபாநாயகர் பதவிக்கு மாற்றாக  1500 இடங்களை மஇகா போராடி பெற்றுத்தருமானால் அதுவே ம.இ.காவின் பெரும் சாதனையாகக் கருதப்படும். அதே வேளையில் சாபநாயகர் பதவியே தலையாயப் பிரச்சனை என்ற தவாறான கண்ணோட்டத்தில் மத்திய செயலவைக் கூட்டம் செயல் படுமேயானால் சமுதாயத்தில் ம.இ.காவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பையும் அது இழக்க நேரிடும் என்பதனை தெளிவுப் படுத்த விரும்புகிறேன்.

துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் 1850 இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் தெரிவித்திருந்தார்.  இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எந்த ஓர் ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை.

நான் அறிந்த வரையில், மாலாக்காவில் ஒரு 100 இடங்களும், கோப்பெங்கில் ஒரு 5 இடங்களும், பகாங்கில் 108 இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களுக்கான விவரங்கள் எனக்கு கிடைக்கவில்ல. ஓர் உயர் பதவியில் இருக்கும் அவர், மிக எளிதாக, எந்தெந்த கல்லூரியில் எத்தனை இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளன என்பதனை  வெளியிட்டிருக்கலாம். பட்டியலை வெளியிடுவதில் எந்த தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

892+350=1242தானே!

 1500 இடங்கள் கொடுக்கப்படும் என்று உறுதி கூறிய தலைவர்கள் அதனை நடைமுறைப் படுத்தி மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் ஜனநாயகம். அதனை விடுத்து துண்டு துண்டாக அறிக்கை விடுத்து மக்களை குழப்புவது அநாகரீகம், ஏமாற்று வேலை.

தேர்தலுக்கு முன்பு நான் வெளியிட்ட செய்தியில் இந்த வருடமும்  1500 இடங்கள் கொடுக்கப்படாததை சுட்டிக் காட்டியிருந்தேன் அதனை எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம் என்றும் ,மக்களைக் குழப்புவதற்காக அப்படி சொல்கிறார்கள். அதனை நம்பக் கூடாது என்றும், அத்தனை இடங்களும் கொடுக்கப்படும் என்று ஒட்டு மொத்த ம.இ.காவினரும் மறுநாளே  செய்தி வெளியிட்டுருந்தனர்.

நான் சொல்வது மக்களை குழப்புகிறாதா அல்லது கமலநாதனின் சமீபத்திய அறிக்கை குழப்புகிறதா என்று மக்களே தீர்மானிக்கட்டும். அவர் செய்தியின் தலைப்பிலே 1850 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று சொல்லிவிட்டு உள்பக்கத்தில், முதலில் 892 இடங்களும் அடுத்த கட்டமாக 350 இடங்கள் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளார் . இவற்றின் கூட்டே  1242 தான் வருகிறது. மீதமுள்ள 608 இடங்கள் எங்கே, எப்போது என்று விளக்கப்படவில்லை.

கமலாநாதனின் 1,850 இடங்கள்  என்ற அறிக்கை அவர் பட்டியலைப் பார்த்த பின்புதான் வெளியிடப்பட்ட ஒன்றா? அல்லது அறிக்கை விடும்படி கட்டாயப் படுத்தப்பட்டு வெளிவந்த ஒன்றா? இதனைக் கமலாநாதன்தான்  விளக்க வேண்டும்!

மேலும் எதற்கெடுத்தாலும் அறிக்கைகளை அள்ளிவிடும்  ம.இகாவின் சமூக வியூகத் தலைவர் சா. வேள்பாரியும், அதன் துணத் தலைவர் ரமணனும் ஏன் இது பற்றி ஒரு அறிக்கையும் விடவில்லை?  விரதமிருந்து பிரதமர் நஜீப்பின் விசுவாசியாகி   துணை  அமைச்சர் பதவியும்  பெற்ற பி. வேதமூர்த்தியின் இது பற்றிய நிலை பாடு என்ன என்று இதுவரைத் தெளிவாக தெரியவில்லை. புலி பதுங்குவது பாய்வதற்கா அல்லது பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கா என்று போகப் போகத்தான் தெரியும்.

TAGS: