பட்ஜெட் போனசுக்கு மகாதிர் பாராட்டு

2012 பட்ஜெட் ஒரு நல்ல பட்ஜெட் என்று வரவேற்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அதில் உள்ள ரொக்க போனஸ் வழங்கும் திட்டத்தைப் பாராட்டினார்.

அது “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் திட்டம்”, என்றவர் வருணித்தார்.

“அது தேர்தலைக் கருத்தில் கொண்டுள்ளது. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் கருத்தில் கொண்டுள்ளது.”  இன்று கோலாலம்பூரில்  மலேசிய தயாரிப்பாளர் கூட்டமைப்பின் புத்தாக்கம் மீதான மாநாட்டைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர் இவ்வாறு கூறினார்.

“அது அரசு செய்துள்ள ஒரு நல்ல காரியம்”, என்றாரவர்.

ஆனால், பக்காத்தான் ரக்யாட் அதன் பட்ஜெட்டிலும் இப்படி போனஸ் வழங்க முன்வந்திருப்பதை மகாதிர் பாராட்டவில்லை. அதைச் சுட்டிக்காட்டியதற்கு: “அது வெற்று வேட்டு”, என்றார்.

“பணத்தைச் செலவிடும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. அதனால் மற்றவர்களின் பணம்தானே. அதை எப்படி வேண்டுமானாலும் செலவிடுவார்கள்.

“அவர்கள் ஆட்சிக்கு வரட்டும். அப்போது தெரியும் பணம் புரட்டுவது எவ்வளவு சிக்கலானது என்பது”, என்றவர் சொன்னார். 

முன்னதாக மகாதிர் தம் உரையில், அரசாங்கம் புத்தாக்க ஆர்வம் கொண்டிருப்பதுடன் தன் கொள்கைகள் சிலவற்றை மறுஆய்வும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.சில கொள்கைகள் காலத்துக்கு ஒவ்வாதவை, புத்தாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ளன.

“நாடு வளர்ந்துள்ளது. ஆனால், அரசாங்கத்தின் பல கொள்கைகளும் விதிமுறைகளும் மாறாமல் இருக்கின்றன”, என்றாரவர்.

தமக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் அண்மையில் மலேசியாவுக்குத் திரும்பினார் என்றும் ஆனால், அவருக்கு நாடுதிரும்பும் நிபுணர்களுக்கு அரசு கொடுப்பதாக உறுதிகூறிய சலுகைகள் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர் ஏற்கனவே நாடு திரும்பி விட்டார் அதனால் சலுகைகள் பெறத் தகுதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.

“அப்படியென்றால், அவர் மேலும் சிறிது காலம் வெளிநாட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும்.”

செய்தியாளர்களுடனான கேள்வி-பதில் நேரத்தில்,  மலேசியாவில் புத்தாக்கத்தில் ஆரவமுள்ளவர் என்பதற்கு முன்மாதிரியாக  யாரைக் குறிப்பிடுவீர்கள் என்றும் மகாதிரிடம் கேட்கப்பட்டது.

“என் பெயரைச் சொல்ல ஆசைதான். ஆனால் அது அடக்கமின்மையாகக் கருதப்படும்”, என்றவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

மலேசியாவின் முதலாம், இரண்டாம் பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் ஆகிய இருவரும் மிகப்பெரிய புதுமைப் புனைவாளர்கள் என்பது அவருடைய கருத்து. அவ்விருவரும்  மூன்று வெவ்வேறு இனத்தவரை அவர்களின் அடையாளங்களை இழக்காதபடி ஒன்றிணைக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்தவர்கள் என்றாரவர்.

TAGS: