எம். குலசேகரன்: அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் நியமனங்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்

kulaகடந்த மே மாதம் அமைச்சர்களாகவும், துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்ட ஐவரின் நியமனங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. ஆகவே அந்நியமனங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரும் வழக்கை டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று காலை மணி 10.00 அளவில் பதிவு செய்தார்.

இந்த வழக்கின் வாதியான எம்.குலசேகரன் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் வாஹிட் ஒமார், பால் லோ செங் குவான் மற்றும் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள வேதமூர்த்தி பொன்னுசாமி, டாக்டர் லோக பால மோகன் ஜகநாதன் மற்றும் அட்மட் பாஷா முகமட் ஹனிபா ஆகியோரை இவ்வழக்கில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரு அமைச்சர்கள் மற்றும் மூன்று துணையமைச்சர்கள் ஆகியோரின் நியமனங்கள் அரசமைப்புச் சட்டம் பிரிவுகள் 43 மற்றும் 43A  ஆகியவற்றுக்கு முரணானவை. ஆகவே, அவர்களின் நியமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தாம் தொடர்ந்துள்ள வழக்கின் சாரம் என்று இன்று காலையில் இந்த வழக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலசேகரன் கூறினார்.

மே 15, 2013 இல் செய்யப்பட்ட இந்த நியமங்கள் செல்லுபடியாகாது என்பதோடு அந்த ஐவரும் இதுவரையில் பெற்ற ஊதியங்கள், சலுகைகள் மற்றும் இதர அனுகூலங்கள் ஆகியவற்றை அவர்கள் மலேசிய அரசாங்கத்திடம் திருப்பித்தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

TAGS: