இந்தோனிசிய புலனாய்வாளர்கள், சுமத்ராவில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீ-க்கு காரணமானவை எனச் சந்தேகிக்கப்படும் எட்டு தென் கிழக்காசிய நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் போடுவதற்குத் தயாராகி வருகின்றனர்.
அந்தப் புகை மூட்டம் இந்தோனிசியாவின் அண்டை நாடுகளான மலேசியாவையும் சிங்கப்பூரையும் கடுமையாகப் பாதித்தது.
காற்றுத் தூய்மைகேட்டுக்கு காரணமானவை எனத் தான் கூறும் நிறுவனங்களுடைய பெயர்களை கடந்த வாரம் இந்தோனிசிய சுற்றுச்சூழல் அமைச்சு வெளியிட்டது.
அந்த நாட்டில் 2009ல் நிறைவேற்றப்பட்ட சட்டம் சுற்றுச்சூழல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. ஆனால் ஊழல், பரந்த நிலப்பரப்பு ஆகியவற்றால் அந்தச் சட்ட விதிகள் அரிதாகவே அமலாக்கப்படுகின்றன.
ராய்ட்டர்ஸ்