மெட்ரிக்குலேசன்: எது உண்மை?

 

m-kulasegaranமு.குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூன் 29, 2013.

நான் கடந்த வியாழக்கிழமை மெட்ரிகுலேசன் விவகாரமாக நாடாளுமன்றதில் கேள்வி கேட்ட பொழுது, இவ்வருடம் 1,500 இடங்கள் இந்திய மாணவர்கள் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் கூறியிருந்தார் .

ஆனால் துணைக் கல்வி அமைச்சரோ ஒதுக்கப்பட்ட இடங்களில் வெறும் 892 இடங்களை  மட்டுமே இந்திய மாணவர்கள்  ஏற்றுள்ளனர் என்ற முரண்பாடான தகவலை வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் மேலும் 330 பேருக்கு இடங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். ஆக மொத்தத்தில் 1850 இந்திய மாணவர்களுக்கு இவ்வருடம் மெட்ரிகுலேசனில் இடம் கிடைத்துள்ளது போன்ற தோற்றத்தை கமலநாதன் ஏற்படுத்தியிருக்கின்றார்.

 

இதில் யார் சொல்வதில் உண்மை இருக்கிறது? இந்திய சமுதாயம் இதனால் மிகவும் குழம்பிப் போயிருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய ஒரே வழியான , இடம் கொடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் பெயர்களையும், நிராகரித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலையும் வெளியிட வேண்டுமென்று கல்வி அமைச்சுக்கு நான் சவால் விடுகின்றேன்.

 இதைச் செய்தால் இந்த அரசு வெளிப்படையான போக்கை கடைப்பிடிக்கிறது என்ற கூற்றை மெய்பிப்பதோடல்லாமல் எல்லா இந்தியப் பெற்றோர்களின் மத்தியில் உலவும் இந்தக் குழறுபடிகளை தீர்க்க முடியும்.

 இன்று வரையில் நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் தேவையான தேர்ச்சிகளைப் பெற்றிருந்தும் மெட்ரிகுலேசனில் படிக்க இடங்கள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மீது சுமத்தி வருகின்றார்கள்.

மேலும் ,இந்திய மாணவர்களுக்கான நுழைவுத் தகுதி 92% ல் இருந்த்து 88% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் முஹைதின் கூறுகின்றார்.

 இது ஆய்வுக்குறிய ஒன்று. என்னிடம் உள்ள பட்டியல்படி அதிகமான இந்திய மாணவர்கள் 8A, 9A, 10A என்று நல்ல தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காமல் இருக்கின்றார்கள். ஆனால், அமைச்சர் சொல்லுவதோ இந்திய மாணவர்கள் திறமை குன்றியவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.

 அதே வேளையில், துணை அமைச்சர் கமலநாதனோ இந்திய மாணவர்கள் கிடைத்த இடைத்தை நிராகரிகின்றார்கள் என்று சொல்கிறார். ஒரு பக்கம் இந்திய மாணவர்கள் தகுதியில்லதாவர்கள் என்று கல்வி அமைச்சர் கூறுகின்றார், மறு பக்கம் துணை அமைச்சர்  இந்திய மாணவர்களுக்குத் தகுதி உண்டு ஆனால் அவர்கள் கொடுத்த இடத்தினை நிராகரித்து விடுகின்றார்கள் என்று. இதில் யாரை நாம் நம்புவது  எங்கே இருக்கின்றது உண்மை?

முதலில், கமலநாதன் அம்னோவிர்கு ஜால்ரா போடுவதை நிறுத்த வேண்டும். இந்திய மாணவர்கள் விவகாரத்தில் அரசியல் நாடகம் ஆடாமல் இருக்க வேண்டும்.

 துணை கல்வி அமைச்சரான அவர், நாடாளுமன்ற விவகாரங்களில் இன்னும் தீவிரமாகவும், தைரியமாகவும், உண்மையாகவும் பேச முயல வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் மக்களுக்கு சேவை என்பது அவரின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர் தெளிவான உண்மையான. விளக்கங்களை முன்வைக்க வேண்டும். உள்ளே ஒரு வகையான விளக்கமும், பத்திரிக்கைகளுக்கு மற்றுமொறு விளக்கமும் கொடுப்பது அநாகரிகம், மக்களை ஏமாற்றுவதற்குச் சமம்.

 மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களின் பட்டியலைப் பெற்று அதனை அவர் வெளியிட்டு அவரின் சமுதாயக் கடப்பாட்டை முன்நிறுத்த வேண்டும்.

மலேசிய இந்தியர்கள் மற்ற இனங்களுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரத் துறையில் மிகவும் பின் தங்கி உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி இருக்கையில் இதனை களைவதற்கு ஒரு வழியாக இந்த அரசாங்கம் மெட்ரிகுலேசனில் அதிகமான இந்திய மாணவர்களுக்கு இடம் வழங்கி அவர்களை மேல்நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்ய ஏன்  தயங்குகிறது?

 இந்தியர்கள் என்ன மூன்றாம் தர குடிமக்களா? அரசமைப்புச் சட்டத்தில் இந்தியர்களுக்கும் சம உரிமை உண்டு என்பதனை அரசாங்கம் உணரவேண்டும். அதற்கு ஏற்றவாறு தேசிய நீரோட்டத்தில் இந்தியர்களையும் இணைக்க அரசாங்கம் நேர்மையாகவும் வெளிப்படையானத் தன்மையுடனும் செயல்பட படவேண்டும் என்பதே இந்நாட்டு  இந்தியர்களின் எதிர்பார்ப்பாகும்.

TAGS: