அமைதியான பாஸ் “செராமா”வில் ஆணிகள் கண்டுபிடிப்பால் பரபரப்பு

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு உரையாற்றிக்கொண்டிருந்த பினாங்கு பாயான் லெப்பாஸ் செராமா அமைதியாக நடந்து முடிந்திருக்கும். ஆனால், செராமா நடைபெற்ற இடத்துக்கு அருகில் பெரிய ஆணிகள் கொத்தாகக் கண்டெடுக்கப்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவு வாக்கில் செராமாவின் முடிவில் கட்சியின் பாதுகாப்பு அணியினர் (யூனிட் அமால்) ஓர் அலங்குலம் நீளமுள்ள ஆணிகளை மேடைக்குக் கொண்டுவந்து காண்பித்தனர்.

செராமா நடைபெற்ற இடத்துக்குச் செல்லும் சாலை நெடுகிலும் 500 மீட்டர் தூரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களின் அடியில் இந்த ஆணிகள் கண்டெடுக்கப்பட்டன.வாகனங்களின் டயர்களைக் குத்திக்கிழிக்கும் வகையில் அவை வைக்கப்பட்டிருந்தன.எனவே, கூட்டத்தினர் திரும்பிச் செல்லும்போது தங்கள்  கார்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் அடியில் ஆணிகள் வைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனப் பாதுகாப்பு அணியினர் எச்சரித்தனர்.

ஆணிகள் புத்தம்புதியவையாக இருப்பதைக் கண்டு மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் முகம்மட் அதிர்ச்சி தெரிவித்தார்.

முன்னதாக சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றிய மாட் சாபு, அம்னோ பக்காத்தான் வசமுள்ள மாநிலங்களைத் திரும்பக் கைப்பற்ற பல்வேறு திருகுதாளங்களில் ஈடுபடுவதாகக் கூறிக் கிண்டலடித்தார். அதன் முயற்சிகள் எதுவுமே பலிக்கவில்லை என்றாரவர்.

செராமாவில் பேசிய பேச்சாளர்கள் அனைவரும் பினாங்கில் முதலமைச்சரும்  டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங்கின் தலைமையில் நடைபெறும் பக்காத்தான் ஆட்சியைத் தற்காத்துப் பேசினர். அவர் பினாங்கு மலாய் சமூகத்தினரை ஓரங்கட்டி விட்டார் என்று அம்னோ கூறுவதை அவர்கள் அபத்தம் என்றனர்.
 
பினாங்கில் மலாய்க்காரர்களின் பெரும்பாலான பிரச்னைகளுக்கு, குறிப்பாக அவர்கள் நில உரிமைகளை இழந்ததற்கு 40 ஆண்டுகளுக்குமேல் அங்கு ஆட்சி செலுத்திய கெராக்கான்தான் காரணம் என்றவர்கள் கூறினர்.

“அப்போது அம்னோ எங்கே போனது. ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் இருந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்?”, என்றந்த பேச்சாளர்கள் வினவினர்.

மாட் சாபு தம் உரையில் அண்மையில் ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் தாம் கலந்துகொண்ட கூட்டங்களில் சிறுசிறு தொந்தரவுகள் இருந்ததாகக் கூறினார்.

“அவர்கள் (அம்னோ) செராமா மூலமாக நம்மை எதிர்க்க மாட்டாமல் குண்டர்தனத்தைப் பயன்படுத்துகிறார்கள்”, என்றாரவர்.

அவர் தம் உரையின் முடிவில், கிளந்தான் மந்திரி புசார் நிக் அசீஸ் நிக் மாட், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கின் தலையையும் முன்னாள் மசீச தலைவர் சுவா ஜுய் மெங்கின் கையையும் வெட்டுவதுபோல் காண்பிக்கும் சுவரொட்டிகள் ஜோகூரில் பரவலாக விநியோகிப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பின்னணியில் மலாய்க்காரர்கள் அல்லது முஸ்லிம்கள் இருந்தால்  அவர்கள் முஸ்லிம்-அல்லாதாரிடையே இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்ப முயல்கிறார்கள் என்றுதான் அர்த்தமாகும் என்றவர் குறிப்பிட்டார். அது ஒரு பாவச் செயலாகும் என்றாரவர்.

“இது எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் விசயமாகும். இதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

TAGS: