துணைப் பிரதமர்: குழந்தைகள் மதமாற்றம் தொடர்பான 2009ம் ஆண்டு முடிவு ‘மாறுபட்டது’

muhaiபெற்றோர்களில் ஒருவர் குழந்தைகளை இஸ்லாத்துக்கு தன்மூப்பாக மதம்  மாற்றுவதற்கு எதிராக 2009ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவு, நடப்பு  சூழ்நிலைகளிலிருந்து மாறுபட்ட அப்போதைய சூழ்நிலைகளில் எடுக்கப்பட்டது  என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் சொல்கிறார்.

2009 முடிவு ‘அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது’ என  அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“இந்த மசோதா கூட்டரசு நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப நடப்பு சூழ்நிலையைப்
பிரதிபலிக்கிறது,” என்றார் அவர்.

குழந்தைகளை மதம் மாற்றுவதற்குப் பெற்றோர்களில் ஒருவருடைய அனுமதி  போதும் எனக் கூறும் 2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப்  பிரதேசம்) மசோதாவின் பிரிவு 107(b) பற்றிக் கருத்துரைக்குமாறு அவர் கேட்டுக்  கொள்ளப்பட்டார்.

முன்மொழியப்பட்டுள்ள அந்த விதியை சிவில் சமூக அமைப்புக்களும்
எதிர்க்கட்சிகளும் குறை கூறியுள்ளன. பிஎன் உறுப்புக் கட்சிகளும் கவலை  தெரிவித்துள்ளன.